இந்தியாவில் இன்று (நவம்பர் 8) மதியம் 2.39 மணியளவில் சந்திர கிரகணம் நிகழ உள்ள நிலையில் சென்னையில் மாலை 5.42 மணியளவில் சந்திர கிரகணத்தை பார்க்கலாம் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.
சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் போது பூமியின் நிழல் நிலவின் மேல் விழுவதால் சந்திர கிரகணம் உருவாகிறது.
சந்திர கிரகணத்தின் ஆரம்ப நிலையை இந்தியாவில் பார்க்க முடியாது. இருப்பினும் முழு சந்திர கிரகணம் மற்றும் பகுதி சந்திர கிரகணத்தை இந்தியாவில் பார்க்கலாம்.
இந்திய நேரப்படி மதியம் 2.39 மணியிலிருந்து மாலை 6.19 மணி வரை சந்திர கிரகணம் நடைபெறுகிறது. முழு சந்திர கிரகணத்தை மதியம் 3.46 மணியளவிலும், பகுதி சந்திர கிரகணத்தை மாலை 6.19 மணியளவிலும் காணலாம். சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். தொலைநோக்கி போன்ற கருவிகளோ, கண்களைக் காத்துக்கொள்ள தனிப்பட்ட கவனமோ தேவையில்லை என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் கூறியுள்ளது.
சந்திரன் உதயமாகும் முன்பே கிரகணம் நிகழ்வதால் இந்தியாவில் அனைத்து இடங்களிலும் முழு சந்திர கிரகணத்தை பார்க்க முடியாது. கொல்கத்தா, சண்டிகர், மும்பை, ஹைதராபாத், சென்னை, நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் சந்திர கிரகணத்தை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் சந்திர கிரகணத்தை சென்னையில் இன்று மாலை 5.42 மணி முதல் ஒரு மணி நேரம் வரையில் பார்க்கலாம்.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே-16-ஆம் தேதி நிகழ்ந்த நிலையில், இன்று இரண்டாவது சந்திர கிரகணம் நடைபெறுகிறது. அடுத்த சந்திர கிரகணம் 2025-ஆம் ஆண்டு நடைபெறும்.
இன்று சந்திர கிரகணம் நடைபெற உள்ளதால் பெரும்பாலான கோயில்களில் பூஜை நடைபெறாமல் நடை சாத்தப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை காலை 8.30 மணிக்கே மூடப்பட்டது. மீண்டும் மாலை 7.30 மணிக்கு நடைதிறக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை காலை 9.30 முதல் மாலை 7.30 வரை சாத்தப்படுகிறது.
செல்வம்
தமிழக மீனவர் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!