நெல்லுக்கான ஆதரவு விலை உயர்வு: எதிர்க்கும் விவசாயிகள்!

இந்தியா தமிழகம்

நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.143 உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், விவசாயிகளை ஓரளவுக்காவது திருப்திப்படுத்தக்கூடிய விலையை அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயப் பொருட்களின் விலை சரியும்போது அந்த சரிவில் இருந்து விவசாயிகள் நஷ்டமடைவதைத் தடுக்கவும், விவசாயப் பொருட்களை வாங்குபவர்கள், மிகக் குறைந்த விலைக்குக் கேட்டு, விவசாயிகளை நஷ்டப்படுத்தாமல் இருக்கவும் ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அதாவது உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், நார்ச்சத்து பயிர்கள், கரும்பு மற்றும் புகையிலை போன்ற 23 வகையான பயிர்களுக்கு விதைப்புக் காலம் தொடங்கும் முன்பே இந்திய அரசு விலையை அறிவிக்கிறது.

இந்த நிலையில் நேற்று (ஜூன் 7) பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது,

“பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூடியதும், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதற்கான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியது.

விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றிய அரசு அவ்வப்போது உயர்த்தி வருகிறது.

இந்த ஆண்டுக்கான கரீப் பருவத்தைக் கருத்தில்கொண்டு விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

அதன்படி, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 7 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. நிலக்கடலை எண்ணெய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 9 சதவிகிதமும், எள் விதைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 10.3 சதவிகிதமும் உயர்த்தப்பட்டுள்ளன.

Centre increases MSP for paddy

நீளமான பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 10 சதவிகிதமும், நடுத்தர பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 8.9 சதவிகிதமும், பச்சைப் பயிறுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 10.4 சதவிகிதமும் உயர்த்தப்பட்டுள்ளன.

ஜவ்வரிசி, கேழ்வரகு, மக்காச்சோளம், உளுந்து, துவரம்பருப்பு, சூரியகாந்தி விதைகள், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 6 சதவிகிதம் முதல் 7 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.143 உயர்த்தப்பட்டு ரூ.2,183 ஆக நிர்ணயிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் இல்லாத அளவு இம்முறை குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், நமது விவசாயிகள் பலன் பெறுவர்” என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

“விவசாய இடுபொருட்களின் விலை மட்டும் உயர்ந்துகொண்டே செல்கிறது. ஆனால், விவசாயிகளின் உற்பத்தி பொருளான நெல் உள்ளிட்ட விளைபொருள்களுக்கு மட்டும் உரிய விலை கிடைப்பதில்லை.

100 நாள் வேலை திட்டப்பணிகளால், விவசாயத் தொழிலாளர்களின் தினக்கூலி உயர்ந்துள்ள நிலையில், ஒன்றிய அரசு குவிண்டாலுக்கு ரூ.143 மட்டுமே உயர்த்தியுள்ளது, விவசாயத்தின் மீதும் விவசாயிகளின் மீதும் ஒன்றிய அரசுக்கு கொஞ்சம்கூட அக்கறை கிடையாது என்பதை இது மீண்டும் மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

ஒன்றிய பாஜக அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக செயல்படக்கூடிய அரசு என்பது ஏற்கெனவே நாங்கள் அறிந்ததுதான்’’ என்று கூறியுள்ளனர்.

மேலும், “தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றிய அரசு வாபஸ் பெற்று, விவசாயிகளை ஓரளவுக்காவது திருப்திப்படுத்தக்கூடிய விலையை அறிவிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜ்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: பனீர் பாப்பர்ஸ்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *