மருத்துவர்களின் பாதுகாப்பு : அனைத்து மாநிலங்களுக்கும் சுகாதாரத் துறை முக்கிய கடிதம்!

Published On:

| By Kavi

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மருத்துவமனைகளில் இரவில் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் அபூர்வ சந்திரா அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொல்கத்தாவில் வேலையை புறக்கணித்து மருத்துவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண் மருத்துவருக்கு  ஏற்பட்ட கொடூரத்துக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் மன்னிப்பு கோரியதோடு, பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் மாநில அரசு சட்டத்திருத்தம் கொண்டும் வரும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 28) மத்திய சுகாதாரத் துறை செயலாளர் அபூர்வ சந்திரா, உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் ஆகியோர் அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் டிஜிபிக்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினர்.

அப்போது இரு துறை செயலாளர்களும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்த ஆலோசனைகளை கேட்டனர்.

மாவட்ட ஆட்சியர், டிஎஸ்பி ஆகியோர் மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகத்துடன் இணைந்து பாதுகாப்புத் தணிக்கை, தற்போதுள்ள உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும், குறைபாடு ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய ஆலோசனை வழங்கினர்.

குறிப்பாக மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில், சிசிடிவி கேமரா காட்சிகளை தவறாமல் கண்காணித்து, தரவுகளைப் பாதுகாப்பாகச் சேமிக்கும் பணியாளர்களைக் கொண்ட ஒரு கட்டுப்பாட்டு அறை திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

மேலும் இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் சுகாதாரத் துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “மருத்துவமனை வளாகங்களில் அனைவரும் பார்க்கக் கூடிய இடத்தில், தாய் மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை பாதுகாக்கும் மாநில சட்டங்கள் மற்றும் பாரத நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகள் ஆகியவற்றை காட்சிப்படுத்த வேண்டும்.

மூத்த மருத்துவர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளை கொண்ட மருத்துவமனை பாதுகாப்புக் குழு மற்றும் வன்முறைத் தடுப்புக் குழுவை அமைக்க வேண்டும்.

மருத்துவமனையின் முக்கிய பகுதிகளுக்கு மக்களும், நோயாளிகளின் உறவினர்களும் செல்வதை ஒழுங்குபடுத்த வேண்டும்.

நோயாளிகளை பார்க்க வரும் அல்லது கவனித்துக்கொள்ள வரும் உறவினர்களிடம் கட்டாயம் விசிட்டர் பாஸ் இருக்க வேண்டும்.

இரவு நேரங்களில் மருத்துவமனை கட்டிடங்கள், விடுதிக் கட்டிடங்கள் மற்றும் பிற பகுதிகளில் தங்கியிருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

மருத்துவமனையின் அனைத்து பகுதிகளிலும் வெளிச்சம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் கட்டாயம் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

24 மணி நேரமும் பணியாளர்களை கொண்ட பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறை அமைத்து, அருகிலுள்ள காவல் நிலையத்துடன் தொடர்பு இருக்க வேண்டும்.

மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்களின் நிலை மற்றும் தேவைகளை மறுஆய்வு செய்து, 24 மணி நேரமும் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கொல்கத்தா மருத்துவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த உச்ச நீதிமன்றம், தேசிய பணிக்குழுவை நியமித்தது. இந்த குழு 10 நாட்களில் அறிக்கை தர உத்தரவிட்டது.

இதன்பின், இக்குழு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிக்களுடன் நேற்று முன் தினம் ஆலோசனை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

பாலியல் குற்றச்சாட்டு… நடிகர் முகேஷ் மீது வழக்குப்பதிவு!

“வாய்ப்புகளின் பூமி” : அமெரிக்காவிலிருந்து ஸ்டாலின் ட்வீட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel