Extends ban on onion exports

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீடிப்பு: விவசாயிகள் வேதனை!

இந்தியா

வெங்காய ஏற்றுமதிக்கு இம்மாத இறுதி வரை  தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு மேலும் பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளதாக விவசாய சங்கங்கள் வேதனை தெரிவித்துள்ளன.

வெங்காயத்தின் விலை அதிகரித்து விடாமல் உள்நாட்டில் விலைக் கட்டுக்குள் இருப்பதற்காக மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 8.12.2023 முதல் 31.3.2024 வரை தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீட்டிக்கப்படுவதாக வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், வெங்காயத்தின் விலை அதிகரித்து விடாமல் இருப்பதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெங்காயத்தின் விலை வெகுவாகக் குறைந்துள்ளது.

நாட்டிலேயே அதிகளவு வெங்காயம் பயிரிடும் மகாராஷ்டிரத்தில் ஒரு குவிண்டால்(100 கிலோ) வெங்காயம் ரூ.4,500க்கு விற்பனையான நிலையில், தற்போது குவிண்டாலுக்கு ரூ.1,200 ஆக வெங்காய விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

ஆசியாவின் வெங்காய ஏற்றுமதியில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக, இந்தியாவிலிருந்து தான் வெங்காய ஏற்றுமதியாகிறது.

கடந்த 2023 மார்ச் 31  உடன் முடிவடைந்த நிதியாண்டில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக இந்தியாவிலிருந்து 2.5 மில்லியன் மெட்ரிக் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டுக்கும், தற்போது ஒரே ஏற்றுமதி குறியீட்டு எண் இருப்பதால் பெரிய வெங்காயத்துக்கு மத்திய அரசு ஏற்றுமதி தடை விதிக்கும்போதெல்லாம், சின்ன வெங்காயத்தின் ஏற்றுமதியும் தடை செய்யப்படுகிறது.

இதனால் சின்ன வெங்காயம் பயிர் செய்துள்ள விவசாயிகள் போதிய விலையின்றி கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெரிய வெங்காயம் போல், சின்ன வெங்காயம் இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படுவதில்லை. தென் மாநிலங்களில் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிப்பது தேவையற்றது.

மத்திய அரசு விதித்துள்ள வெங்காய ஏற்றுமதி தடையால் விவசாயிகள் பலர் சின்ன வெங்காயம் சாகுபடி மேற்கொள்வதை தவிா்க்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டு கடந்த காலங்களைப் போல சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் உயரும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் தொடங்கி இந்தியாவின் வெங்காய ஏற்றுமதியை அதிகமாகச் சார்ந்திருக்கும் மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் மத்திய அரசின் அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேற்கண்ட நாடுகளில் வெங்காய விலை ஏற்றத்தைக் கண்டுள்ளதால் சீனா, எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து வெங்காய ஏற்றுமதி அதிகரித்திருப்பதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

பியூட்டி டிப்ஸ்: வியர்வை வாடை இல்லாமல் வலம் வர…

ஹெல்த் டிப்ஸ்: கோடையில் அதிகம் பரவும் நோய்கள்… தப்பிப்பது எப்படி?

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

உதயசூரியன் நாடு: விடிய விடிய உல்லாசம்!

 

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *