central government invited farmers to hold negotiations
விவசாயிகளிடம் ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக சென்று கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் மத்திய அரசு சார்பில் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் கடந்த 18ஆம் தேதி 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது, பருத்தி, சோளம், துவரை, உளுந்து, மசூர் பருப்பு ஆகியவற்றை 5 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்ய உறுதி அளிக்கிறோம் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்திருந்தார்.
ஆனால், “குறிப்பிட்ட 5 பயிர்களுக்கு மட்டும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து, அதனடிப்படையில் விளைபொருட்களை கொள்முதல் செய்கிறோம் என்று மத்திய அரசு தரப்பு கூறுவதை நிராகரிக்கிறோம்” என்று கிஷான் மஸ்தூர் மோர்ச்சா சங்கம் அறிவித்தது.
இந்நிலையில் மீண்டும் இன்று (பிப்ரவரி 21)10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஞ்சாப் ஹரியானா விவசாயிகள் டிராக்டர், ஜேசிபி இயந்திரங்களுடன் டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது ஷம்பு பகுதியில், போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி வருகின்றனர். இதனால் பஞ்சாப் ஹரியானா எல்லை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், “விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். விவசாயிகளின் தொடர் போராட்டத்தை அரசு பலத்தை பயன்படுத்தி ஒடுக்கக் கூடாது” என்று பஞ்சாப் விவசாய சங்கமான பாரதிய கிசான் யூனியன் தலைவர் ஜோகிந்தர் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
“நான்காவது சுற்று பேச்சுவார்த்தையை தொடர்ந்து எம்எஸ்பி கோரிக்கை, பயிர் பல்வகைப்படுத்துதல்,பயிர் கழிவுகளை எரித்தல், வழக்குகள் போன்ற அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசுவதற்கு அரசு தயாராக இருக்கிறது. 5ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்று மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப்-ஹரியானா எல்லைப் பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள விவசாயிகள், வேளாண் வாகனங்களுடன் அங்கு முகாமிட்டு வருகின்றனர்.
அதேசமயம் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான், ‘அமைதியாக பேரணி செல்லும் விவசாயிகளை மத்திய அரசும், ஹரியான அரசும் டெல்லிக்குள் அனுமதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்த இடங்களுக்கு ‘மழை’ உண்டு: வானிலை மையம்
பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சீருடைகள்: மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு!