அமேசான், ப்ளிப்கார்ட், மீஷோ மீது மத்திய அரசு நடவடிக்கை!

Published On:

| By Kavi

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 ஐ மீறி சீட் பெல்ட் அலாரத்தை நிறுத்தும் கிளிப்புகளை விற்பனை செய்ததற்காக அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல், ஷாப்க்லூஸ், மீஷோ ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கார்களில் பயணம் செய்யும் போது ஓட்டுநர் உள்ளிட்ட அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டியது கட்டாயம். சீட் பெல்ட் அணியவில்லை என்றால் அலாரம் ஒலி எழுப்பும்.

இந்த அலார எச்சரிக்கையை தொந்தரவாக நினைப்பவர்களுக்கு வசதியாக ஒரு கிளிப் ஆன்லைனில் விற்கப்படுகிறது. இந்த கிளிப்பை வாங்கி மாட்டினால் அலாரம் நின்றுவிடும்.

இது அமேசான், ப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை தளங்களில் கிடைத்து வந்தன. இதனை விற்பனை செய்த ஆன்லைன் நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து இன்று (மே 12) மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“அலார எச்சரிக்கையை தங்களுக்கு தொந்தரவாக கருதும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல், ஷாப்க்லூஸ், மீஷோ ஆகிய நிறுவனங்கள், சீட் பெல்ட் அலாரத்தை நிறுத்தும் 13,118 கிளிப்புகளை இதுவரை விற்பனை செய்துள்ளன.

இதனை வாங்கி பயன்படுத்தியவர்கள் பலர் விபத்துகளில் சிக்கியுள்ளனர். அவ்வாறு நிகழ்ந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு சீட் பெல்ட் அலாரத்தை நிறுத்தும் கிளிப்புகளை காரணம் காட்டி காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க மறுத்துள்ளன.

இதன் அடிப்படையில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்கு வந்த புகார்களை கருத்தில் கொண்டு தற்போது ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

கடந்த 2021 ஆம் ஆண்டு 16,000 த்திற்கும் மேற்பட்டோர் சீட் பெல்ட் அணியாத காரணத்தினால் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 8,438 ஓட்டுநர்களும், 7,959 பயணிகளும் அடங்குவர். 39,231 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 16,416 பேர் ஓட்டுநர்கள் ஆவர். சாலை விபத்தில் சிக்கியவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சீட் பெல்ட் அலாரத்தை நிறுத்தும் கிளிப்புகளை தயாரித்த உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான கடிதத்தை அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அனுப்பியுள்ளது.

பிரியா

நாளை தேர்தல் ரிசல்ட்: திருவண்ணாமலையில் டி.கே.சிவக்குமார் தரிசனம்!

பிறந்தநாள்: எடப்பாடியை திணறவைத்த தொண்டர்கள்!

டிஜிட்டல் திண்ணை: ஆர்.எஸ்.எஸ். வீசிய வலை-உறுதி செய்த அண்ணாமலை: மீண்டும் நிதியமைச்சர்- பிடிஆர் நம்பிக்கை!

Central government action on Amazon
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share