பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) வலுவான கட்டமைப்பு இல்லாததால் தனியார் நிறுவனங்களை விட சேவையில் பின் தங்கியிருந்தது.
குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கி வரும் நிலையில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்கவே திணறி வந்தது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகத்தில் மக்கள் விரைவான சேவையை வழங்கும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதனால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சி கேள்விக் குறியாகவே இருந்து வந்தது. இந்நிலையில் தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தை மறுசீரமைக்கவும் தனியார் நிறுவனங்களைப் போல வேகமாக செயல்படவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இதற்காக மத்திய அமைச்சரவை ரூ.89,047 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நேற்று (ஜூன் 8) ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படும்.
மேலும், பல்வேறு இணைப்புத் திட்டங்களின் கீழ் கிராமப்புறங்களில் 4G கவரேஜை வழங்கவும், அதிவேக இணையத்திற்கான நிலையான வயர்லெஸ் சேவைகளை வழங்கவும், கேப்டிவ் நான்-பப்ளிக் நெட்வொர்க் சேவைகள்/ஸ்பெக்ட்ரம் வழங்கவும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதி பயன்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 4ஜி மற்றும் 5ஜி சேவை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தொடங்கிவிட்டதாகவும் ஏறக்குறைய 25,000 கிராமங்களுக்கு 4G கவரேஜை வழங்குவதே தங்களது நோக்கம் என்றும் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால் பிஎஸ்என்எல் புத்துயிர் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோனிஷா
‘ஆளுநர் கட்சி உறுப்பினர் போல் செயல்படுகிறார்’ – செல்லூர் ராஜூ
’வணிக மின் கட்டண உயர்வும் பொதுமக்களை பாதிக்கும்: ஜெயக்குமார்