மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சனையால் பாதிக்கப்பட்ட விமான நிலைய சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக மத்திய விமான போக்குவரத்த்துறை அமைச்சகம் இன்று (ஜூலை 20) தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த கிரவுட்ஸ்டிரைக் நிறுவனம் மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட பல்வேறு மென்பொருள் நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது.
இந்தநிலையில், கிரவுட்ஸ்டிரைக் நிறுவனம் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய நேற்று (ஜூலை 19) பால்கன் சென்சாரை அப்டேட் செய்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால் வர்த்தகம், விமானம், ஐடி, மருத்துவம் என மென்பொருள் சார்ந்த அனைத்து சேவைகளும் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டன.
விமான நிலையங்களில் உள்ள டிஜிட்டல் போர்டுகள் செயல்படாததால் விமான வருகை, புறப்பாடு விவரங்கள் பலகையில் எழுதிவைக்கப்பட்டன. உலகம் முழுவதும் நேற்று மட்டும் 3000 விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இந்தியாவில் 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில், விமான சேவையில் ஏற்பட்ட பிரச்சனைகள் மெல்ல மெல்ல சீரடைந்து வருவதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிகாலை மூன்று மணி முதல் விமான நிலைய சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயல்பாக செயல்படத் தொடங்கியுள்ளன.
தற்போது விமான போக்குவரத்து சீராக நடந்து வருகிறது. மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சனையால் ஏற்பட்ட குளறுபடிகள் மெல்ல மெல்ல குறைக்கப்படுகிறது. இன்று மதியத்திற்குள் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம். விமான நிலைய செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பயணிகளின் பொறுமைக்கு நன்றி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…