மக்களவை தேர்தலுக்குப் பிறகு நம் நாட்டில் செல்போன் கட்டண உயர்வு 15 – 17 சதவீதம் உயரும் என தனியார் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் பாதிக்கும் வகையில் ஒரு அதிர்ச்சிகர ஆய்வறிக்கையை மும்பையைச் சேர்ந்த Antique Stock Broking நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
அதில் தேர்தல் முடிந்தவுடன் நாட்டில் உள்ள அனைத்து செல்போன் நிறுவனங்களின் கட்டணமும் 15 – 17 சதவீதம் உயர வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி கட்டண உயர்வு எப்போது?
அனைவர் கையிலும் இருக்கக்கூடிய செல்போன் என்பது இந்தியாவில் அத்தியாவசிய சாதனமாகிவிட்டது. அதே போன்று தொலைத்தொடர்பு துறையில், ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தற்போது சூப்பர் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது தவிர வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் நிறுவனங்களும் உள்ளன.
கடைசியாகக் கடந்த 2021 டிசம்பரில் செல்போன் நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை சுமார் 20 சதவீதம் வரை உயர்த்தி இருந்தது. அதனைத்தொடர்ந்து சுமார் இரண்டரை வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் கட்டண உயர்வு ஏற்பட உள்ளது.
ஏர்டெல் நிறுவனத்துக்கு அடிக்கும் ஜாக்பாட்!
இதுகுறித்து ஆய்வறிக்கையில் ரீஜார்ஜ் கட்டணமும் உயருவது தவிர்க்க முடியாதது என்றும், இதன் மூலம் ஏர்டெல் நிறுவனமே அதிக பயன் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு செல்போன் நிறுவனத்திற்கும் ஒவ்வொரு பயனாளரிடம் இருந்து பெறும் சராசரி வருமானம் முக்கியம். இதை ஆங்கிலத்தில் ARPU என்று குறிப்பிடுவார்கள். அதன்படி ஏர்டெல் நிறுவனத்தின் தற்போதைய ARPU ரூ.208ஆக இருக்கும் நிலையில், அதை சில ஆண்டுகளில் ரூ.286 ஆக அதிகரிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது ஒரு பயனரிடமிருந்து 78 ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
அதேபோல 2ஜி சேவையில் இருந்து 4ஜி சேவைக்கு மாறுவதால் 9 ரூபாயும், போஸ்ட்பெய்டுக்கு மாறுவதன் மூலம் ரூ.14 கூடுதல் வருவாய் அந்நிறுனவத்துக்கு கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் 2ஜி மேம்படுத்தல்கள், நிறுவன விரிவாக்கம், பைபர்-டு-தி-ஹோம் மற்றும் தொடர்ச்சியான போட்டிக்கு மத்தியில் 5ஜி சேவையால் என சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் அடுத்த மூன்று ஆண்டுகளில் அதன் சிறந்த நிதிச் செயல்திறன் கட்டத்தை அடையும் என்று தரவுகள் கூறுகின்றன.
சராசரியாக செல்போன் நிறுவனங்களின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஒரு சதவிகித வளர்ச்சியை மட்டுமே எட்டும். இந்தநிலையில், அவற்றுக்கு மாறாக அடுத்து வரும் ஆண்டுகளில் ஏர்டெல் நிறுவன சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 2 சதவிகிதமாக அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
பங்கு வர்த்தக நிலவரம்!
கடந்த 5, 6 ஆண்டுகளாகவே ஏர்டெல், ஜியோ பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் பயனாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது இந்நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்திலும் எதிரொலிக்கிறது. இந்தியாவின் ஏர்டெல் மற்றும் ஜியோ என இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கடந்த 5.5 ஆண்டுகளாக பங்குகளின் விலை உயர்ந்துள்ளது. அதேவேளையில் வோடபோன் ஐடியா மற்றும் அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் இதில் பின்னடைவை சந்தித்துள்ளன.
கடந்த 2018ஆம் ஆண்டு வோடாஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்கு வர்த்தகம் 37.2 சதவீதமாக இருந்த நிலையில், 2023 டிசம்பரில் 19.3 சதவீதம் என கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் ஜியோவின் பங்கு வர்த்தகம் 21.6 சதவீதத்திலிருந்து அதிகமாக 39.7 சதவீதமாகவும், ஏர்டெலின் பங்கு வர்த்தகம் 29.4 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாகவும் உயர்ந்து லாபம் ஈட்டியுள்ளன.
இந்தநிலையில் தான் மக்களவை தேர்தலுக்குப் பிறகு கட்டண உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. இது செல்போன் நிறுவனங்களுக்கு வலு சேர்க்கும் என்றாலும், சாமானிய மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தி அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பேங்க் எம்ப்ளாயி ‘அக்கவுண்ட்ல’ இவ்வளவு பணமா?…’லக்கி பாஸ்கர்’ டீசர் எப்படி?
Thug Life: அடுத்தடுத்து வெளியேறும் நட்சத்திரங்கள்… அந்த நடிகர் மட்டும் உறுதியாம்..!