சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 12) வெளியானது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி, மார்ச் 21 வரை நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு நடைபெற்றது.
நாடு முழுவதும் உள்ள 28,471 சிபிஎஸ்இ பள்ளிகள் மூலம், 21,658,05 மாணவர்கள் தேர்வெழுத விண்ணப்பித்து தேர்வு எழுதினர்.
இவர்களில் 93.12 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 20,167,79 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவாகும்.
2022ல் 21,09,208 பேர் விண்ணப்பித்து 20,93,978 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 94.40 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
2022ஐ காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 1.28 சதவிகிதம் குறைவாகும்.
இந்த ஆண்டு திருவனந்தபுரம் (99.91%), பெங்களூரு (99.18), சென்னை (99.14) ஆகிய மண்டலங்கள் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளன.
கடந்த ஆண்டு சென்னை மண்டலத்தில் 98.78% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
2023ல் வெளிநாட்டுப் பள்ளிகள் மூலம் 25,095 மாணவர்கள் பதிவு செய்து 24,843 பேர் தேர்வெழுதி மொத்தம் 97.29சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்த ஆண்டு நடந்த தேர்வில் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
மாணவர்கள் 92.27சதவிகிதம் பேரும், பெண்கள் 94.25சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1,95,799 மாணவ மாணவிகள் 90 சதவீதத்துக்கு அதிகமாகவும், 44,297 மாணவ மாணவிகள் 95சதவீதத்துக்கு அதிகமாகவும் அனைத்து பாடங்களிலும் மதிப்பெண் வாங்கியுள்ளனர்.
இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைவு என்றாலும் கொரோனா காலத்துக்கு முந்தைய 2019ஆம் ஆண்டு பெற்ற தேர்ச்சி விகிதத்தை விட அதிகமாகும்.
அந்த ஆண்டு 91.10சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் நிதிஷ் குமார்: யார் இவர்?
மருத்துவ கல்லூரி கலந்தாய்வு: மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்!