புதிய மதுபான கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று (அக்டோபர் 17) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறார். இதையடுத்து அவர் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
டெல்லியில் அமல்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கையில், மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
டெல்லி ஆளுநர் சக்சேனா இதுகுறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதை அடுத்து, சிபிஐ அதிகாரிகள் மணீஷ் சிசோடியா வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.
மேலும், சிசோடியாவிற்கு சொந்தமான, குருகிராம், சண்டிகர், மும்பை, ஹைதராபாத், லக்னோ, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சிபிஐ சோதனை நடத்தினர்.
விசாரணையில் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில், சிபிஐ போலீசார், கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். புதிய கலால் கொள்கையை உருவாக்கி அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியது குறித்து மணீஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில், “சிபிஐ அதிகாரிகள் எனது வீட்டில் 14 மணி நேரம் சோதனை நடத்தியும், எந்த ஒரு ஆதாரங்களையும் கைப்பற்றவில்லை.
நாளை காலை 11 மணிக்கு சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு விசாரணைக்காக என்னை அழைத்துள்ளார்கள். நான் சிபிஐ அலுவலகத்திற்கு சென்று முழு ஒத்துழைப்பு அளிப்பேன். சத்யமேவ ஜெயதே” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிபிஐ விசாரணையில், மும்பையை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயர், மதுபான வியாபாரி அபிஷேக் போயின்பள்ளி, இண்டோஸ்பிரிட் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சமீர் மகேந்திரா உள்ளிட்டோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சிபிஐ அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையில், “கலால் கொள்கையை மாற்றி அமைத்ததில் முறைகேடுகள் நடந்துள்ளது.
மதுபான உரிமம் வைத்திருப்பவர்களுக்கு தேவையற்ற சலுகைகள் நீட்டிக்கப்பட்டன. உரிம கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
தகுதி வாய்ந்த அதிகாரியின் அனுமதியின்றி மதுபான உரிமம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவிட் 19 காரணமாக, டிசம்பர் 28, 2021 முதல் ஜனவரி 27, 2022 வரையிலான காலகட்டத்தில்,
மதுபான கடைகளுக்கான டெண்டர் உரிம கட்டணத்தில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு 144 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.” என்று வழக்குப்பதிவு செய்துள்ளது.
குஜராத் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால், பாஜக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜர் ஆவதால் டெல்லியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செல்வம்