ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இன்று (ஜூன் 6) முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஒடிசா மாநிலம், பாலசோர் அருகே பஹானகா பஜார் ரயில் நிலையத்தில் ஜூன் 2 ஆம் தேதி இரவு 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளது. அதில் 101 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் இருக்கிறது.

விபத்து நடந்த இடத்தில் 3ஆம் தேதி ஆய்வு மேற்கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதன் விசாரணையில், இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட சிக்னல் கோளாறே விபத்திற்கு மூலக் காரணம் என்று கண்டுபிடித்துள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.
இதனையடுத்து ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் ரயில்வே வாரியம் பரிந்துரைத்தது. அதனடிப்படையில் இன்று காலை 10 சிபிஐ அதிகாரிகள் அடங்கிய குழு ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த விசாரணையின் முடிவில், ரயில் விபத்துக்கு சிக்னல் கோளாறா?, ஊழியர்களின் தவறா? அல்லது நாசவேலை ஏதும் காரணமா என்பது தெரியவரும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே விபத்திற்கான மூல காரணம் கண்டுபிடித்துவிட்டோம் என்று கூறிய நிலையில் சிபிஐ விசாரணை ஏன் என்று பலத்தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிபிஐ-ல் ரயில்வே துறையை சேர்ந்த வல்லுநர்கள் இல்லாத நிலையில் எப்படி விசாரணை நடைபெறும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மோனிஷா