கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது பதிவு செய்யப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவரும், துணை முதல்வருமான சிவகுமாருக்கு தொடர்புடைய இடங்களில் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி ஐடி சோதனை நடத்தியது.
வருமான வரித்துறை சோதனையைத் தொடர்ந்து அமலாக்கத் துறையும் டி.கே.சிவக்குமாருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது.
இதையடுத்து 2019ல் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இவர் மீதான வழக்கு குறித்து சிபிஐ விசாரணை நடத்த அப்போதைய மாநில பாஜக அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து வருமானத்துக்கு அதிகமாக 74 கோடி ரூபாய் சிவக்குமார் சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
சிபிஐ விசாரணைக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் டி.கே.சிவகுமார் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தனி நீதிபதி கே.நடராஜன், டி.கே.சிவக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து டி.கே.சிவக்குமார் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் தலைமை நீதிபதி பிரசன்னா பி வரலே மற்றும் நீதிபதி எம்ஜி எஸ் கமல் அடங்கிய அமர்வு சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனு இன்று (ஜூலை 31) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சி.டி.ரவிக்குமார் மற்றும் பி.வி.சஞ்சய் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிவக்குமார் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். சிபிஐ தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ ஆஜரானார்.
அபிஷேக் மனு சிங்வி வாதாடுகையில்,
“உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்துதான் சிபிஐ வழக்கு தாக்கல் செய்திருக்கிறது. ஆனால், உயர் நீதிமன்ற இரு அமர்வு உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடரவில்லை” என்று தெரிவித்தார்.
சிபிஐ வழக்கறிஞர் எஸ்.வி.ராஜூ வாதாடுகையில்,
“ சிவக்குமாரின் மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு விரைந்து முடிவெடுக்க உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், டி.கே.சிவகுமார் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்புத் தெரிவித்தனர்.
உயர் நீதிமன்றமே முடிவெடுக்கும் என்று தெரிவித்த நீதிபதிகள் சிபிஐ மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
பிரியா
“எதிர்க்கட்சி தலைவரை நாடாளுமன்றத்தில் பாஜக பேசவிடுவதில்லை” – திருச்சி சிவா
மணிப்பூர் சம்பவம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!