ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்க விநியோகிக்கப்பட்ட நெய்யில் மாட்டுக்கொழுப்பை கலப்படம் செய்ததாக, தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க இரண்டு சிபிஐ அதிகாரிகள், இரண்டு ஆந்திர போலீஸ் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் என ஐந்து பேர் கொண்டு சிறப்பு புலனாய்வு குழுவை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமைத்தது. cbi arrests four people
இந்த சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையில், நெய் விநியோகத்தில் விதிமீறல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தநிலையில், நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலந்த வழக்கில், உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியைச் சேர்ந்த போலே பாபா டெய்ரி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களான விபின் ஜெயின், போமில் ஜெயின், பூனம்பாக்கம் வைஷ்ணவி டெய்ரியின் தலைமை நிர்வாக அதிகாரி அபூர்வா சாவ்தா மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர் டெய்ரியின் நிர்வாக இயக்குநர் ராஜு ராஜசேகரன் ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தினர் நெய் விநியோகத்திற்காக ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தின் பெயரில் டெண்டர்களை வாங்கியுள்ளனர். இதற்காக வைஷ்ணவி டெய்ரி நிறுவனம் தவறான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது. மேலும், உத்தரபிரதேச மாநிலம் ரூர்க்கியில் உள்ள போலே பாபா டெய்ரியில் இருந்து நெய் வாங்கப்பட்டதாக வைஷ்ணவி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையில், போலே பாபா டெய்ரி நிறுவனம் இவ்வளவு பெரிய அளவில் நெய்யை வழங்கும் திறன் கொண்டதல்ல என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனையடுத்து மூன்று டெய்ரி நிறுவனங்களைச் சேர்ந்த நான்கு நபர்களைக் கைது செய்தனர். இவர்கள் நான்கு பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து திருப்பதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. cbi arrests four people