வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த நிலையில் இன்று (அக்டோபர் 13) டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
நீர் பற்றாக்குறையால் கருகும் குறுவை பயிர்களுக்காக கர்நாடக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
வறட்சி கால அட்டவணைப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடாமல் மறுப்பு தெரிவித்து வருகிறது கர்நாடகா.
இந்நிலையில் நேற்று முன் தினம் டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு அக்டோபர் 16 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்தது.
இதனையடுத்து இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில்,
தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 13,000 கன அடி நீர் திறந்து விட உத்தரவிட வேண்டும் என்றும் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு திறந்து விடாமல் நிலுவையில் உள்ள 12.176 டிஎம்சி நீரை உடனடியாக திறந்து விட கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்த உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
காவிரிப் படுகை முழுவதும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் ஆகவேண்டும்: மீத்தேன் கூட்டமைப்பு
ஆபரேஷன் அஜய்: தாயகம் திரும்பிய 212 இந்தியர்கள்