தமிழகத்திற்கு 3000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று ஒழுங்காற்று குழு பரிந்துரைத்திருந்த நிலையில் நாளை (அக்டோபர் 13) காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது.
டெல்டா பாசனத்திற்காக காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்துவிட கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா பின்பற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விடவில்லை.
இந்நிலையில் நேற்று டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு பாசனத்திற்காக அக்டோபர் 16 முதல் 31 ஆம் தேதி வரை வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.
ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை குறித்து ஆலோசிப்பதற்காக நாளை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நாளை மதியம் 2 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். ஒழுங்காற்றுக் குழுவின் பிரதிநிதிகள், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 13,000 கன அடி தண்ணீர் திறந்துவிடவும் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிலுவையில் உள்ள 12.176 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும் வலியுறுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
மோனிஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: அன்பில் மகேஷ்