வேலைக்காக இடஒதுக்கீடு வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு மதம் மாறுவது அரசியலமைப்பை மோசடி செய்வதற்கு சமம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் கொம்பாக்கம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராணி. 2015ஆம் ஆண்டு அப்பர் டிவிசன் கிளார்க் பணிக்காக விண்ணப்பித்து தேர்வெழுதி தேர்ச்சி பெற்றார்.
இந்த பணியை பெறுவதற்கு கிறிஸ்துவரான செல்வராணி இந்து மதம் என்று கூறி எஸ்டி சான்றிதழுக்கு தாசில்தாரிடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
விஏஓ அறிக்கையின் படி, மனுதாரரின் தந்தை வள்ளுவன் என்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது தாயார் பிறப்பால் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். இவர்கள் திருமணத்துக்கு பின் தந்தையும் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டார். 1990ஆம் ஆண்டு பிறந்த செல்வராணி குழந்தையாக இருக்கும்போதே பாண்டிச்சேரி வில்லியனூரில் உள்ள லூர்து ஆலயத்தில் ஞானஸ்நானம் பெற்றார்.
இந்தநிலையில் இந்து மதத்தில் எஸ்.டி. சான்றிதழ் கேட்ட செல்வராணியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் உயர் நீதிமன்றம் சென்றார்.
உயர் நீதிமன்றமும் செல்வராணியின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், பட்டியலினத்தவர் என்று சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு நேற்று(நவம்பர் 26) நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “மனுதாரர் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொள்கிறார் என்பதையும், தேவாலயத்திற்கு தவறாமல் செல்வதன் மூலம் மத விசுவாசத்தை தீவிரமாக கடைப்பிடிப்பதையும் முன்வைக்கப்பட்ட சான்றுகள் தெளிவாக நிரூபிக்கின்றன” என்று கூறினர்.
“இட ஒதுக்கீட்டில் வேலைபெறுவதற்காக இந்து என்று கூறி சாதி சான்றிதழ் கேட்கிறார். இந்த இரட்டை கூற்றுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. ஞானஸ்நானத்திற்குப் பிறகு தன்னை ஒரு இந்து என்று தொடர்ந்து அடையாளம் காண முடியாது.
பிற மதத்தின் மீது உண்மையான நம்பிக்கை இல்லாமல், உள்நோக்கம் கொண்டவர்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன்களை நீட்டிப்பது சமூக நெறிமுறைகளை தோற்கடிக்கும் செயலாகும்.
இவரது செயல் இடஒதுக்கீட்டின் நோக்கத்திற்கு எதிரானது மற்றும் அரசியலமைப்பின் மீதான மோசடிக்கு சமம்” என்று மனுதாரருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
அவரது மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
14 மாத சண்டைக்கு பிறகு இஸ்ரேல், ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்
சமூகநீதியில் முன்னேறும் தெலங்கானா, பின்தங்கும் தமிழ்நாடு… ராமதாஸ் காட்டம்!
Comments are closed.