வாக்குப்பதிவு விவரத்தை வெளியிட கோரி வழக்கு: உச்சநீதிமன்றம் மறுப்பு
நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச்சாவடி வாரியாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை வெளியிட இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று (மே 24) தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 5 கட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவில் 66.14% , இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 66.71% , மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் 65.678% , நான்காம் கட்ட வாக்குப்பதிவில் 69.16% , ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவில் 60.48% வாக்குகள் பதிவானது.
இந்நிலையில், வாக்குச்சாவடி வாரியாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
வாக்குச்சாவடி வாரியாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை அறிய 17சி அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கமான ஏடிஆர் அமைப்பு சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று (மே 24) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
“இந்த மனுவிற்கு தேர்தல் ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதமும் வாக்காளர்களின் எண்ணிக்கையை வெளியிடக்கோரி ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது” என தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது.
தொடர்ந்து, இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி மற்றும் துஷ்வந்த் தவே வாதிட்டனர்.
அவர், “முதல் மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்குப்பதிவு சதவீதத்தில் பெருமளவு வித்தியாசம் உள்ளது.
எனவேஇடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கவேண்டும். , வாக்குப்பதிவு சதவீதத்தையும், வாக்காளர்களின் எண்ணிக்கையையும் உடனடியாக தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் உடனுக்குடன் வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுவது சாத்தியமானது தான். தேர்தல் விதிமுறைகளின்படி 17 சி படிவ விவரங்களை வெளியிட வேண்டும் என்றுதான் தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் கேட்கிறோம்.
நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளிலும் மொத்தமாக 17சி படிவத்திற்கான ஆவணங்களை வெளியிட்டால், ஒவ்வொரு தொகுதிக்கும் சேர்த்து மொத்தமாக தேர்தல் அதிகாரிகள் 1911 படிவங்களை வெளியிட்டால் போதும். இதை வெளியிடுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது” என வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், “ஏற்கனவே 5 கட்ட தேர்தல் முடிவடைந்து விட்டது. எனவே, இந்த வழக்கில் தற்போது எந்தவித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து வாதிட்ட அபிஷேக் சிங்வி, “தேர்தல் என்பது ஒருமுறை நடைபெறுவதில்லை. தொடர்ந்து நடைபெறும். எனவே 5 கட்ட தேர்தல் முடிந்துவிட்டது என்று கூறி இந்த வழக்கை நிராகரிக்க கூடாது” என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா, “நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இடையில் தலையிட விரும்பவில்லை. அதனால் எந்தவித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணை கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நடைபெறும்’ என்று தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெள்ளை உடை திருவள்ளுவர் சிலை : ஆளுநர் வழிபாடு!