ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பகைமை ஊக்குவித்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக யோகா குரு ராம்தேவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்ளூரைச் சேர்ந்த பதாய் கான் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சவுஹாத்தான் காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி நடந்த கூட்டத்தில் இந்து மதத்தை இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்துடன் ஒப்பிட்டு பேசிய ராம்தேவ், முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை நாடுவதாகவும், இந்து பெண்களைக் கடத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.
மற்ற இரண்டு மதங்களும் மதமாற்றத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் நேரத்தில் இந்து மதம் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு நல்லது செய்யக் கற்றுக்கொடுக்கிறது என்று கூறினார்.
இந்த நிலையில் ராம்தேவ் மீது, ஐபிசி பிரிவுகள் 153A(மதம், இனம், பிறந்த இடம், இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்),
295A(மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கில், மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் தீங்கிழைக்கும் செயல்கள்) மற்றும் 298(எந்தவொரு நபரின் மத உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கத்துடன் பேசுதல்),
உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அலோபதி மருத்துவம், மருத்துவர்களுக்கு எதிராக அவதூறான கருத்துகளைப் பேசியதற்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு (ஐஎம்ஏ) கடும் கண்டனம் தெரிவித்து,
நிபந்தனையற்ற மன்னிப்பை அடுத்த 15நாட்களுக்குள் யோகா குரு பாபா ராம்தேவ் கேட்காவிட்டால் ரூ.1,000கோடி இழப்பீடு தர வேண்டும் என்று இந்திய மருத்துவக் கூட்டமைப்பு நோட்டீஸ் அனுப்பியது.
இந்தக் கருத்துக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என ஐஎம்ஏ தெரிவித்தது.
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கடிதம் எழுதி, பாபா ராம்தேவ் அவரின் கருத்தை வாபஸ் பெறக்கோரி வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து பாபா ராம்தேவ் தனது கருத்தைத் திரும்பப்பெற்று, தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
–ராஜ்
நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தைப்பூச திருவிழா!