மங்களூருவில் நேற்று நடைபெற்ற தாக்குதல் தீவிரவாத தாக்குதல் என்று கர்நாடகா டிஜிபி இன்று (நவம்பர் 20) தெரிவித்துள்ளார்.
கோவையில் கடந்த மாதம் 23ஆம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் குறித்து முதலில் கோவை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது.
இது பயங்கரவாத தாக்குதல் என்றும் ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி குற்றம்சாட்டி வருகிறார். இந்த சூழலில் தொடர்ந்து சென்னை, கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று (நவம்பர் 19) மாலை கர்நாடக மாநிலம் மங்களூருவின் கன்கனாடி காவல் நிலையம் அருகே நகூரி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று திடீரென வெடித்தது. ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஒருவர் மற்றும் ஆட்டோ ஒட்டுநர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினரும், தடயவியல் துறையினரும் சோதனை நடத்தினர். அப்போது ஆட்டோவில் பேட்டரிகளுடன் கூடிய வெடித்த நிலையில் குக்கர் ஒன்று கைப்பற்றப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் இது பயங்கரவாத தாக்குதலாக இருக்குமோ என்று சந்தேகித்தனர்.

இதுதொடர்பாக இன்று (நவம்பர் 20) கர்நாடக டிஜிபி பிரவீன் சூத் ட்விட்டர் பக்கத்தில், “ இது பயங்கரவாத தாக்குதல் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பு தற்செயலானது அல்ல.
கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படும் பயங்கரவாத செயலுக்கான அடையாளம். இதுகுறித்து கர்நாடக மாநில காவல்துறையும், மத்திய அமைப்புகளும் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆதார் அட்டை, கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் வசிக்கும் ரயில்வே ஊழியரான பிரேம் ராஜ் என்பவருடையது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு பேருந்தில் ஆதார் அட்டையை தொலைத்துவிட்டதாக பிரேம் ராஜ் தரப்பில் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்டவர் மைசூருவில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்திருப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
சந்தேகத்திற்குரிய அந்த பயணி கர்நாடகாவில் அறை எடுத்துத் தங்கியிருந்த வீட்டிலும் சோதனை நடத்திய போலீசார் அதன் உரிமையாளரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

மைசூரைச் சேர்ந்த வீட்டின் உரிமையாளர் எம்.மோகன் குமார், அந்த சந்தேக நபர் தனதுவீட்டில் வாடகை இருந்ததற்கான வாடகை ஒப்பந்த நகலை போலீசாரிடம் காட்டியுள்ளார்.
அதன்மூலம் மாதம் ரூ.1800 செலுத்தி ஒரு அறை மட்டும் எடுத்து அந்த சந்தேக நபர் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. அதில் சந்தேக நபரின் பெயர் பிரேம்ராஜ், s/o ஸ்ரீ மாருதி என்று ஹூப்பள்ளி முகவரி இடம் பெற்றிருந்தது.
அதோடு அந்த அறையிலிருந்து, வெடிகுண்டு பொருட்கள், சர்க்யூட் போர்டு, கந்தக அமிலம், சில ரசாயனப் பொருட்கள், போல்ட், பேட்டரிகள், மொபைல் டிஸ்ப்ளேக்கள், மரத்தூள், அலுமினியம் ஃபாயில், கம்பிகள், பிரஷர் குக்கர் போன்ற பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதுதவிர ஒரு மொபைல் போன், இரண்டு போலி ஆதார் கார்டு ,ஒரு பான் கார்டு, ஒரு டெபிட் கார்டு, பயன்படுத்தப்படாத சிம் மற்றும் சர்க்யூட் வரைபடங்கள் கொண்ட நோட்புக் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
“இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் தற்போது பேசும் சூழலில் இல்லை. போலீஸ் குழு அனைத்து தகவல்களையும் சேகரித்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் உறுதியான தகவல் வெளியாகும்” என்று கர்நாடக உள்துறை அமைச்சர் அகர ஞானேந்திராவ் தெரிவித்துள்ளார்.

கர்நாடக டிஜிபி பிரவீன் சூத் கூறுகையில், “ஆட்டோவில் கிடைத்த ஆதார் கார்டில் உள்ள புகைப்படம் அதில் பயணித்தவர் போல்தான் இருந்தது.
ஆனால் அது அவர் இல்லை. அவர் மீது மிகுந்த சந்தேகம் எழுந்துள்ளது. அவர் எந்த இடத்தையாவது குறிவைத்துத் தாக்க திட்டமிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அதேசயமத்தில் அவரது இலக்கு என்ன என்று எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்று வந்துள்ளார். சமீபத்தில் கோயம்புத்தூர் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளுக்கும் சென்று வந்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கும், தற்போதைய நிகழ்வுக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லையா என இப்போதைக்குச் சொல்ல முடியாது. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. ஆட்டோவில் கண்டுபிடிக்கப்பட்டது குறைந்த தீவிரம் கொண்ட குண்டு ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.
“சந்தேகிக்கப்படும் நபர் சிம் கார்டுகளை கோவையிலிருந்து போலி பெயரில் வாங்கியிருக்கிறார். அதன் டவர் லொகேஷன் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அவர் சென்று வந்திருப்பது தெரியவருகிறது.
எனவே தமிழகத்தில் உள்ள அவரது கூட்டாளிகளை கண்டறிய அவரது அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன” என்று மத்திய புலனாய்வு அமைப்புகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மங்களூர் சம்பவத்தை தொடர்ந்து கோவை – கர்நாடக எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சென்னை முழுவதும் நள்ளிரவில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
“நேரில் வாங்க பேசிக்கலாம்” – விஜய் ஆலோசனை!
கரீம் பென்சிமா விலகல்: பிரான்ஸ் அணிக்கு பின்னடைவு!