பெண் மருத்துவர்கள் இரவில் பணிபுரிவதை தவிர்க்க வேண்டும் என்று மேற்கு வங்க அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 17) கண்டனம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொடூர சம்பவத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டமும் வெடித்தது. இந்த வழக்கு தொடர்பாக மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் அதே வேளையில் பணிக்கு செல்லாமல் நீதி கேட்டு மருத்துவர்களின் போராட்டமும் தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, பெண் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண் மருத்துவர்கள் இரவில் பணிபுரிவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதை தலைமை நீதிபதி அமர்வு முன்பு மருத்துவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங் மற்றும் கருணா நுண்டி தெரிவித்தனர்.
இதனை கேட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், “பெண்கள் இரவில் வேலை செய்ய முடியாது என்று நீங்கள் (மேற்கு வங்க அரசு) எப்படி கூறுகிறீர்கள்? பெண் மருத்துவர்களை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? அவர்களுக்கு சலுகை தேவையில்லை… பெண்கள் இரவு நேர ஷிப்டில் வேலை செய்யத் தயாராக உள்ளனர்.
பெண்களுக்கு பாதுகாப்பை அதிகரிப்பதற்குப் பதிலாக, பெண் மருத்துவர்கள் இரவில் பணியாற்றக் கூடாது என்று நீங்கள் கூற முடியாது என்று தலைமை நீதிபதி கூறினார்.
தொடர்ந்து மேற்கு வங்க மாநிலம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபலை நோக்கி, “மிஸ்டர் சிபல், மேற்கு வங்க அரசு அதன் அறிவிப்பை திருத்த வேண்டும், இரவில் பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதே அரசின் கடமையாகும்” என்று தெரிவித்தார்.
அனுஜ் கர்க் வழக்கில், பெண்கள் மதுபானக் கடைகளில் வேலை செய்யக்கூடாது என்று பஞ்சாப் அரசு பிறப்பித்த நிபந்தனையை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே ரத்து செய்துள்ளதை தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
மேலும் பெண் மருத்துவர்களின் பணி நேரத்தை 12 மணிநேரமாக அரசு நிர்பந்திக்க முடியாது. ஆண், பெண் பேதமின்றி அனைத்து மருத்துவர்களுக்கும் பணி நேரம் நியாயமானதாக இருக்க வேண்டும் என்றும், ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண் மருத்துவர்களை குறிவைப்பது பொருத்தமற்றது என்று தலைமை நீதிபதி சந்திரசூட் மேற்கு வங்க அரசு மீதான தனது அதிருப்தியை தெரிவித்தார்.
இதனையடுத்து, பெண் மருத்துவர்களின் பணி நேரத்தை 12 மணி நேரமாகக் கட்டுப்படுத்தும் ஷரத்துகளை நீக்கி, அவர்களுக்கான இரவுப் பணியைத் தவிர்க்க வேண்டும் என்று ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் அரசு மாற்றங்களைச் செய்யும் என்று கபில் சிபல் ஒப்புக்கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பக்கிங்ஹாம் மர்டர்ஸ் : விமர்சனம்!
”நடக்காத விஷயங்களை பரப்பாதீங்க” : குமுறும் குக் வித் கோமாளி மணிமேகலை