நீட் கருணை மதிப்பெண் ரத்து : உச்ச நீதிமன்றத்தில் தேர்வு முகமை பதில்!

Published On:

| By Kavi

நீட் கருணை மதிப்பெண் வழங்கிய மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த மே 5ஆம் தேதி நடந்த நீட் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. 60க்கும் மேற்பட்டோர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றதும், அடுத்தடுத்த ரோல் நம்பர் கொண்ட 6 பேர் முதலிடம் பெற்றதும் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் வெடித்தது.

இந்நிலையில் 1,563 மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமையால் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை தன்னிச்சையாக கருணை மதிப்பெண் என்ற பெயரில் கூடுதல் மதிப்பெண் வழங்கியிருப்பதாகவும், இதை தெளிவுப்படுத்தும் வரை மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் இன்று (ஜூன் 13) நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் கனு அகர்வால் ஆஜராகி, “1563 மாணவர்களுக்கு நேர இழப்பின் அடிப்படையில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மாணவர்களின் அச்சத்தை போக்க இவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணை ரத்து செய்ய தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. அவர்களுக்கு மறுத்தேர்வு நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

“ஜூன் 23ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும். இதில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இல்லையென்றால் கருணை மதிப்பெண்கள் கழித்துகொள்ளப்பட்டு உண்மையான மதிப்பெண்கள் தெரிவிக்கப்படும்.

மறுதேர்வு முடிவுகள் 30ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்” என்றும் தேசிய தேர்வு முகமை சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்த நீதிபதிகள் மறுதேர்வுக்கான அறிவிப்பாணையை இன்றே வெளியிட உத்தரவிட்டனர்.

ஜூலையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என்பதால் ஜூன் 30-க்குள் முடிவுகளை வெளியிடுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தினர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஞானம் அடைய சமந்தா சொல்லும் ரூட்!

குறைந்த தங்கம், வெள்ளி விலை!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share