எச்-1B விசாக்கள் வைத்திருந்தால் மட்டுமே அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் வெளிநாட்டு பிரஜைகள் தற்காலிகமாக வேலை செய்ய முடியும் என்கிற நிலையில், அமெரிக்க எச்-1B விசா வைத்திருக்கும் 10,000 பேர் கனடாவுக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கும் வகையில், ஓப்பன் வொர்க் பர்மிட் ஸ்ட்ரீமை (Open Work Permit Stream) அரசாங்கம் உருவாக்கும்’ என்று கனடாவின் குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ வெளியீட்டில், “கனடாவிலும், அமெரிக்காவிலும் உயர் தொழில்நுட்பத் துறைகளில், பெரிய செயல்பாடுகளைக் கொண்ட நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
அமெரிக்காவில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் எச்-1B விசாவைக் வைத்துள்ளனர். எச்-1B ஸ்பெஷலிட்டி ஆக்குபேஷன் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்களோடு வரும் குடும்ப உறுப்பினர்கள், கனடாவுக்கு வர விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
எச்-1B விசா வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குக் கல்வி அல்லது பணிபுரிவதற்கான அனுமதியும் வழங்கப்படும். இந்தப் புதிய முடிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மூன்று ஆண்டுகள் வரை கனடாவில் பணிபுரிய அனுமதி பெறுவார்கள்.
அவர்கள் கனடாவின் எல்லாப் பகுதிகளிலும், எந்தவொரு நிறுவனத்திலும் வேலை செய்ய முடியும்’’ என்று குறிப்பிட்டுள்ளது.
கனடா அரசின் இந்த அறிவிப்புக்கு எச்-1B விசா வைத்திருப்பவர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி அமெரிக்கச் சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி பைடன் நிர்வாகம் திறமையான இந்திய பணியாளர்களுக்கு எச்-1B விசாக்களை எளிமையாக்கும் தொடக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதும் நினைவுகூரத்தக்கது.
ராஜ்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: கறிவேப்பிலை தோசை