கனடா சர்ச்சை: இந்தியாவுக்கு எதிராக திரும்பும் உலக நாடுகள்!

செப்டம்பர் மாதத்தில் துவங்கி, இந்தியா – கனடா இடையே ஒரு பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. இது கனடாவில் வாழும் இந்தியர்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஜூன் 18 அன்று, சீக்கிய காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கனடாவின் சர்ரேவில் உள்ள சீக்கிய கோவில் ஒன்று அருகே துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்நாட்டில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் கனடா நாடாளுமன்றத்தில், ஹார்தீப் சிங் நிஜ்ஜரின் படுகொலையில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக, அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்து ட்ருடோ சர்ச்சை கிளப்பினார். மேலும், நிஜ்ஜர் படுகொலைக்கு பிறகு, ஒரு இந்திய அதிகாரி கனடாவை விட்டு வெளியேற்றப்பட்டார்.

முன்னதாக, இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டிலும் ஜஸ்டின் ட்ருடோ இந்த சர்ச்சையை விவாதத்திற்கு கொண்டுவந்ததாகவும் தகவல் வெளியானது.

பின், இந்தியா இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தது. மேலும், கனடாவில் வாழும் இந்தியர்களை பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தி இருந்தது. இந்த தொடர் சம்பவங்கள் மக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், கடந்த சில தினங்களில் அந்த பதற்றம் சற்று தணிந்து காணப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவின் நிர்பந்தத்தின் அடிப்படையில், கனடா அரசு அதன் 41 அதிகாரிகளை இந்தியாவில் இருந்து திரும்ப பெற்றுள்ள சம்பவம், மீண்டும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி, “புது டெல்லி காரணமில்லாமல் செயல்படுகிறது”, என குற்றம் சாட்டினார்.

இதை தொடர்ந்து, இந்தியாவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “இந்திய அரசின் இந்த அச்சுறுத்தல், வியன்னா மாநாட்டு தீர்மானத்திற்கு எதிரானது. சர்வதேச விதிகளின் மிக அடிப்படை சாராம்சத்திற்கு எதிராக இந்தியா செயல்பட முடிவெடுத்துள்ளது. இதன்மூலம், இந்தியா பல லட்ச மக்களை அபாய நிலையில் வைக்கிறது”, என தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள், கனடாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து, இந்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசின் வற்புறுத்தலால், கனடா அதிகாரிகள் அந்நாட்டில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ள சம்பவம், மிகுந்த அய்யத்தை ஏற்படுத்துகிறது”, என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலை தொடர்பாக கனடா நடத்தும் விசாரணைக்கு, இந்தியா ஒத்துழைப்பு தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது..

அதேபோல, பிரிட்டன் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கனடா அதிகாரிகளை வெளியேற்றும் இந்திய அரசின் முடிவு, எங்களுக்கு ஏற்புடையதாகப் படவில்லை”, என தெரிவித்துள்ளது.

உலக அரங்கில், இந்தியாவுக்கு நெருங்கிய நட்பு நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளே, இந்தியாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

முரளி

டிஜிட்டல் திண்ணை: அமர் பிரசாத் கைது… அடுத்து என்ன? அண்ணாமலைக்கு ஷாக்!

 

 

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts