அமெரிக்காவில் நீதிபதி ஒருவர் தனது மனைவியை சுட்டு கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் ஆரஞ்ச் நகர் பகுதியில் நீதிபதியாக இருப்பவர் 72 வயதான ஜெப்ரி பெர்குசன்.
இவர் தன்னுடைய மனைவி ஷெர்லி உடன் அனஹிம் ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்தது. கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஷெர்லியை நீதிபதி ஜெப்ரி பெர்குசன் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், ஷெர்லி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
பின்னர், ஜெப்ரியின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நீதிபதி ஜெப்ரியை போலீசார் கைது செய்தனர்.
பின்னர், நீதிபதி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 47 துப்பாக்கிகள் மற்றும் 26, 000 தோட்டக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேவேளை கைது செய்யப்பட்ட நீதிபதி ஜெப்ரி 1 மில்லியன் டாலர்கள் பிணையில் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு நேற்று (ஆகஸ்ட் 15) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதி ஜெப்ரி பெர்குசனின் வழக்கறிஞர் ” சம்பவத்தன்று ஜெப்ரி பெர்குசன் தனது மனைவியை சுடுவதை போல் விரல்களை காட்டி மிரட்டினார். அப்போது அவரது மனைவி என்னை உண்மையான துப்பாக்கியை கொண்டு சுட்டு கொன்றுவிடுங்கள் என்று கத்தியிருக்கிறார்.
அப்போது மது போதையில் இருந்த நீதிபதி ஜெப்ரி, தன்னுடைய கணுக்கால் ஹோல்ஸ்டரில் இருந்து கைத்துப்பாக்கியை எடுத்து சுட்டு விட்டார். இது தற்செயலாக நடைபெற்ற சம்பவம் என்பதால் இதில் நீதிபதி ஜெப்ரி மீது குற்றம் சுமத்த முடியாது” என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கை வரும் அக்டோபர் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதியே தன்னுடைய மனைவியை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
குறைந்த விலையில் ஓலா எலக்ட்ரிக் இருசக்கர வாகனம்!