இந்திய நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாக உச்சநீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் உத்தரவிட்டிருப்பது நீதித்துறை வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநில அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் விசாரணை நடத்தி வந்தார்.
அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி உட்பட அக்கட்சியை சேர்ந்த பலரை விசாரிக்க சி.பி.ஐ. க்கு உத்தரவிட்டார்.

சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் இந்த வழக்கில் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதனை எதிர்த்து அபிஷேக் பானர்ஜி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஏப்ரல் 17ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரிக்கக் கோரிய கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இதற்கிடையே ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கு தொடர்பாக நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். இது மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.
நீதிபதியை மாற்றிய உச்சநீதிமன்றம்
செய்தித் தொலைக்காட்சிக்கு நீதிபதி கங்கோபாத்யாய் பேட்டி அளித்ததற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை கடந்த 24ஆம் தேதி தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது ”ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கு குறித்து நீதிபதி கங்கோபாத்யாய் செய்திச் சேனலுக்கு பேட்டி அளித்தாரா என்பதை சரிபார்த்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கொல்கத்தா உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனைத்தொடர்ந்து நேற்று ஏப்ரல் 28ஆம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றப் பதிவாளர், நீதிபதி பேட்டியின் மொழிப்பெயர்ப்பு அறிக்கையை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில், மேற்கு வங்காள பள்ளி ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கை வேறொரு நீதிபதி அமர்வுக்கு மாற்றுமாறு கொல்கத்தா உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது நிலுவையில் இருக்கும் வழக்கு தொடர்பாக நீதிபதிகள் செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது என தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தினார்.

நள்ளிரவு வரை காத்திருப்பேன்
இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த சில மணி நேரங்களில் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
தனது பேட்டி தொடர்பாக தலைமை நீதிபதி அமர்வு முன்பு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை, தனது பேட்டியின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பு மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் பதிவாளரின் பிரமாண பத்திரம் ஆகியவற்றின் அசல் வடிவங்களை தனக்கு முன் இன்று (நேற்று) நள்ளிரவு 12 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற செயலாளருக்கு அவர் உத்தரவிட்டார்.
இதற்காக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தனது அறையில் இரவு 12.15 மணி வரை காத்திருப்பேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

கங்கோபாத்யாயாவின் உத்தரவுக்கு தடை
இதையடுத்து இரவு 8 மணிக்கு சிறப்பு விசாரணையை உச்ச நீதிமன்றம் கூட்டியது. நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிபதி கங்கோபாத்யாயாவின் உத்தரவு “முறையற்றது” மற்றும் “நீதித்துறை ஒழுக்கத்திற்கு” எதிரானது என்று குறிப்பிட்டது.
மேலும், நீதித்துறையின் நடைமுறையைக் கருத்தில் கொண்டு தானாகவே முன்வந்து உச்ச நீதிமன்ற செயலாளருக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயாவின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்த உத்தரவின் நகலை உடனடியாக கொல்கத்தா உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு அனுப்புமாறு தலைமைச் செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்மூலம் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் உச்சநீதிமன்றம் இடையிலான மோதல் முடிவுக்கு வந்தது. எனினும் இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை நடைபெறாத அரிய நிகழ்வாக உச்சநீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் உத்தரவிட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியுடன் பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஊழல் கூட்டணியின் நட்சத்திர பேச்சாளர் கமல்ஹாசன்: வானதி சீனிவாசன்
Comments are closed.