இன்றைய தேதியில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றால் பாஜக 306 இடங்களைக் கைப்பற்றும் என்று சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பெரும்பான்மை பலத்துடன் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்துள்ள பாஜக அதனை தக்க வைக்க வேண்டும் என்றும், எப்படியாவது பாஜகவை வீழ்த்த வேண்டும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் தேர்தல் பிரச்சாரங்களை ஏற்கெனவே தொடங்கிவிட்டன.
இந்த நிலையில் இன்றைய தேதியில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்.. யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று இந்தியா டுடே – சி வோட்டர் ’மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த மொத்தம் 25,951 பேர் நேர்காணல் செய்யப்பட்டனர். மேலும் வழக்கமான டிராக்கர் தரவுகளிலிருந்து கூடுதலாக 1,34,487 பேரிடம் பெறப்பட்ட தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஆக மொத்தம் 1,60,438 பேரிடம் இருந்து இந்த கருத்துக்கணிப்பு ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை நடத்தப்பட்டது.
பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றி!
அதன் முடிவில், லோக்சபா தேர்தல் இன்று நடந்தால், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 306 இடங்களில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியை மீண்டும் தக்கவைக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.டி.ஏ கூட்டணி 2019 நாடாளுமன்ற தேர்தலில் வென்ற 357 இடங்களை விட இது குறைவாக இருந்தாலும், பெரும்பான்மை பெற தேவையான 272 இடங்களை எளிதாக கடக்கும்.
மேலும் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பை விட, என்.டி.ஏ தற்போது எட்டு இடங்களை அதிகம் பெற்றுள்ளது.
அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணி 193 இடங்களைப் பெறும் என்றும், மற்ற அரசியல் கட்சிகள் 44 இடங்களைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், புதிதாக உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 153 இடங்களை கைப்பற்றும் என ஜனவரி மாதம் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் தெரிவிக்கப்பட்டது. இப்போது, ஆகஸ்ட் மாத வாக்கெடுப்பில் 40 இடங்களை அதிகமாக பெற்றுள்ளது.
வாக்கு சதவீதத்தை பொருத்தவரை, இன்று தேர்தல் நடத்தப்பட்டால் என்.டி.ஏ கூட்டணி 43 சதவீத வாக்குகளையும், ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணி 41 சதவீத வாக்குகளைப் பெறும் என்று மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
மேலும் மொத்த தொகுதிகளில் கட்சி வாரியாக பாஜக 287 இடங்கள், காங்கிரஸ் 74 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணி எப்படி?
கருத்துக்கணிப்புக்கு பதிலளித்தவர்களில் பெரும்பான்மையானோர் கருத்துப்படி, 54 சதவீதம் பேர் இந்தியா கூட்டணியால் பாஜகவை தோற்கடிக்க முடியாது என்றும், 33 சதவீதம் பேர் இந்தியா கூட்டணி பாஜகவை தோற்கடிக்கும் என்றும், மீதமுள்ள 13 சதவீதம் பேர் தெரியவில்லை என்றும் பதிலளித்துள்ளனர்.
பெயர் மாற்றம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு வாக்குகளைப் பெறுமா என்ற கேள்விக்கு 39 சதவீதம் பேர் ஆம் என்றும், 30 சதவீதம் பேர் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு 18 சதவீதம் பேர் ஐ.என்.டி.ஐ.ஏ ஒன்றும் கவர்ச்சியான பெயராக இல்லை என்றும், மீதமுள்ள 13 சதவீதம் பேர் பெயர் மாற்றம் தேர்தலை எவ்வாறு பாதிக்கும் என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.
இந்திய கூட்டணியை வழிநடத்த யார் பொருத்தமானவர் என்ற கேள்விக்கு, 24 சதவீதம் பேர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தலா 15 சதவீத வாக்குகளை பெற்றுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத் துறை செயலாளர் அதிரடி ஆய்வு!
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: அதிகாரிகளுக்கு ராஜேஷ் லக்கானி உத்தரவு!
Comments are closed.