பி.டெக் முதலாமாண்டு மாணவர் தற்கொலை: ஐஐடியில் சாதிப் பாகுபாடா?
மும்பை ஐஐடியில் முதலாமாண்டு படித்து வந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கு சாதிப் பாகுபாடே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மும்பை பவாய் பகுதியில் உள்ள ஐஐடி-யில் அகமதாபாத்தைச் சேர்ந்த மாணவர் தர்சன் சோலங்கி என்பவர் பி.டெக். முதலாமாண்டு படித்து வந்தார்.
கடந்த 12 ஆம் தேதி மாலை திடீரென விடுதியின் 7வது மாடியில் இருந்து விழுந்து அவர் பரிதாபமாக இறந்தார்.
தற்கொலை என்று உறுதி செய்யும் வகையில் மாணவர் எழுதிய குறிப்பு எதுவும் கிடைக்காததால், விபத்து மரணம் என்ற பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எனினும் தற்கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெறுகிறது.
அவர் உயிரிழப்பதற்கு ஒரு நாள் முன்பு தான் தேர்வு முடிந்ததால் படிப்பு தொடர்பான அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால் இது ஒரு நிறுவன படுகொலை என ஐஐடி-யில் செயல்படும் அம்பேத்கர் பெரியார் புலே ஸ்டடி சர்க்கிள் குற்றம் சாட்டியுள்ளது.
இது ஒரு தனிப்பட்ட பிரச்னை கிடையாது. நாங்கள் புகார் கொடுத்திருக்கும்போதிலும், தலித் பகுஜன் ஆதிவாசி மாணவர்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை நிர்வாகம் ஏற்படுத்தவில்லை.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள், தகுதியற்றவர்கள் என்ற மனப்பான்மையால் முதலாம் ஆண்டு மாணவர்கள் மிகவும் துன்புறுத்தப்படுகின்றனர்.
கல்வி நிறுவன வளாகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் போதிய பிரதிநிதித்துவம் மற்றும் கவுன்சிலர்கள் இல்லாததுதான் இதற்குக் காரணம்.
பட்டியலின மாணவர்கள் மற்ற மாணவர்களால் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்ற உண்மையை மறைக்க முடியாது. ஐஐடி வளாகத்தில் இட ஒதுக்கீட்டுக்கு ஏற்ற சூழ்நிலை இல்லாமல் இருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.
சோலங்கி இறந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, வளாகத்தில் ஒரு இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து, அவரது பெயரை குறிப்பிடாமல், நிறுவனத்தின் இயக்குனர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இதுவும் பல மாணவர்களை கொந்தளிக்க வைத்தது.
சோலங்கியின் இறப்பின் போதும் அவருக்குப் பெயரிடப்படுவதற்கான கண்ணியம் ஏன் மறுக்கப்பட்டது என்று மாணவர்கள் கேட்டதற்கு, வளாகத்தில் உள்ள சில அதிகாரிகள் “அவரது பெற்றோரிடம் இருந்து தேவையான ஒப்புதல் பெறவில்லை” என்று கூறினார்கள். இது ஆதாரமற்ற சாக்கு என்று மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
பூனைகள் மற்றும் நாய்களின் இறப்பு குறித்து வெளியிடப்பட்ட குறிப்புகளிலும் அவற்றின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவர்கள் தர்ஷனின் மரணத்தின் போதும் அவருக்கு கண்ணியமான பிரியாவிடை வழங்க மறுத்துவிட்டனர் என்று மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
18 வயதே ஆன தர்சன் சோலங்கி, முதல் தலைமுறை தலித் மாணவர். இவரது தந்தை ரமேஷ்பாய், பிளம்பராக பணிபுரிகிறார். அவரது தாயார், தர்லிகாபென், அகமதாபாத்தில் உள்ள மணிநகரில் வீட்டு வேலை செய்கிறார்.
குடும்பத்தில் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்த தனது மகன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
ஐஐடியில் நிலவிய பாகுபாடே காரணம் என பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சாதி ரீதியாக ஒதுக்கப்படுவதாக தர்சன் தொலைப்பேசியில் பேசும்போது தனது சகோதரியிடமும், அத்தையிடமும் புலம்பியுள்ளார்.
கடந்த மாதம் வீட்டிற்கு வந்தபோது, ஐஐடியில் சாதிய ரீதியாக பாகுபாடு காட்டப்படுவதாக என்னிடமும், என் அம்மா, அப்பாவிடமும் வருந்தியதாக சகோதரி ஜான்வி சோலன்கி கூறியுள்ளார்.
சாதி குறித்து அறிந்துகொண்டதால், உடன் படித்த நண்பர்களின் நடத்தையிலும் மாற்றங்கள் இருந்ததாகக் கூறினான். நண்பர்கள் உடன் சாப்பிடுவதையும், உடன் வெளியே செல்வதையும் தவிர்த்துவிட்டதாக வருத்தப்பட்டான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகன் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தொடர் தொந்தரவால் அவன் தற்கொலை செய்துகொண்டதாகவும் மாணவரின் தாயார் தர்லிகாபென் சோலன்கி தெரிவித்துள்ளார்.
மேலும், ஐஐடியில் தான் இடஒதுக்கீட்டில் இலவசமாக படிப்பது சக நண்பர்களுக்குப் பிடிக்கவில்லை எனக் கூறினார்.
நாங்கள் அதிக பணத்தை செலவிட்டு படிக்கும் இடத்தில் நீ இலவசமாக படிக்கிறாய் என்று சிலர் கேட்டதாகவும் தெரிவித்தான். அதனால், சில நண்பர்களிடம் பேசுவதையே நிறுத்தியிருந்தான் என்று அவரின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.
சாதிப் பாகுபாடு தொடர்பான குற்றச்சாட்டுக்கு மும்பை ஐஐடி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
முதலாமாண்டு மாணவன் தற்கொலை செய்துகொண்டது குறித்து பல கட்டுக்கதைகள் வெளிவருகின்றன. இது நிறுவனக் கொலை என்றும் வகைப்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல என்று ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கலை.ரா
‘வாத்தி’க்கு புது சிக்கல்: முதல்வருக்கு சென்ற கோரிக்கை!
மின் இணைப்புடன் ஆதார் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!