பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். என் மீது தவறு இருந்தால் கைது செய்வார்கள் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார்.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் மல்யுத்த வீரர்கள் தங்களது பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக நேற்று அறிவித்தனர்.
உத்தராகண்ட் ஹரித்துவாருக்கு தங்கள் பதக்கங்களுடன் வீரர்கள் பேரணியாக சென்றனர். காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தியதால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய சங்க தலைவர் நரேஷ் திகைத் மல்யுத்த வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தங்களது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், வீரர்களிடம் இருந்த பதக்கங்களை பெற்றுக்கொண்டார். நரேஷ் திகைத் கேட்டுக்கொண்டதால் பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவை மல்யுத்த வீரர்கள் திரும்ப பெற்றனர்.
5 நாட்களுக்குள் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யவில்லை என்றால் மீண்டும் ஹரித்துவாருக்கு வந்து தங்களது பதக்கங்களை கங்கையில் வீசுவோம் என்று அறிவித்தனர்.
மல்யுத்த வீரர்களின் இந்த முடிவு குறித்து லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரிஜ் பூஷன் சரண் சிங்,
“பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். என் மீது தவறு இருந்தால் கைது செய்வார்கள்.
மல்யுத்த வீரர்கள் கங்கையில் பதக்கங்களை வீசுவதாக அறிவித்துவிட்டு பின்னர் விவாசாய தலைவர் திகைத்திடம் பதக்கங்களை கொடுத்துள்ளார்கள். அது அவர்களுடைய நிலைப்பாடு. நாம் என்ன செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார்
செல்வம்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!