பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் திறக்கப்படுவதற்கு முன்பே பாலம் இடிந்து விழுந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெகுசராய் மாவட்டத்தின் சாஹேப்பூர் கலாம் என்ற இடத்தில் கந்தக் ஆற்றின் மீது 206 மீட்டர் நீளமுள்ள பாலம் 2017 ஆம் ஆண்டு 13 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.
முதல்வர் நபார்டு திட்டத்தின் கீழ் கடந்த 2016 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலம் கட்டும் பணி துவங்கி, 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிவடைந்தது.
ஆனால் பாலம் திறக்கப்படாமல் இருந்தது. என்றாலும் டிராக்டர்கள், கனரக வாகனங்கள் பாலத்தின் மீது சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு ஒரு ஜே சி பி இயந்திரம் பாலத்தின் மீது சென்றது. அதன் பிறகு பாலத்தின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டது.
இந்தநிலையில், தூண் எண் 2-3 இடையே பாலத்தின் முன் பகுதி ஞாயிற்றுக்கிழமை சரிந்து ஆற்றில் விழுந்தது.
ஆனால் காலை நேரம் என்பதாலும், அந்த சமயம் வாகனம் எதுவும் செல்லாததாலும் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
பாலத்தின் முன் பகுதியில் விரிசல் காணப்பட்டாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை,
இந்த பாலம் கட்டுவதில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளன என்று கிராமமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்..
முன்னதாக ஜூலை 2020 இல், கோபால்கஞ்ச் மாவட்டத்தில் ரூ. 263.47 கோடி செலவில் கட்டப்பட்ட 9.1 கிமீ நீளமுள்ள சத்தர்காட் பாலத்தின் ஒரு பகுதி முதல்வர் நிதிஷ் குமாரால் திறந்து வைக்கப்பட்ட 29 நாட்களுக்குப் பிறகு இடிந்து விழுந்தது.
எட்டு ஆண்டுகளில் 263 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த பாலம் 29 நாட்களில் இடிந்து விழுந்தது.
ஊழலின் தந்தை நிதிஷ் குமார் இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேச மாட்டார் அல்லது தனது ஊழல் நிறைந்த சாலை அமைச்சரை சஸ்பெண்ட் செய்யமாட்டார் என்று ஆர்ஜேடி தலைவரும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ட்வீட் செய்திருந்தார்.
ஆகஸ்ட் 2022 இல் பாஜகவுடனான ஆளும் உறவைத் துண்டித்த நிதிஷ்குமார் பீகாரில் மகாகத்பந்தன் அரசாங்கத்தை அமைக்க ஆர்ஜேடி மற்றும் பல கட்சிகளுடன் கைகோர்த்தார்.
இப்போது தேஜஸ்வி யாதவ் மாநிலத்தின் துணை முதலமைச்சராக உள்ளார். ஆனால் தற்போது பெகுசராய் மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்தது குறித்து அவர் வாய் திறக்கவில்லை என்று பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.
கலை.ரா
“ஆண்டுதோறும் 100 ஆணவக்கொலைகள் நடக்கின்றன” – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை