கடந்த 1980 ஆம் ஆண்டுகளில் சாலிடர், பி.பி.எல். டிவிக்கள் பிரபலமாக இருந்தன. இவை, கறுப்பு வெள்ளை டி.விக்கள் ஆகும். பிரிட்டிஷ் பிசிக்கல் லேபாராட்டரிஸ் என்ற விரிவாக்கம் கொண்ட பி.பி.எல் நிறுவனத்தை உருவாக்கியவர் டி.பி.ஜி. நம்பியார் என்பவர் ஆவார்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் இந்த நிறுவனம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இவரின், தலைமையில் பி.பி.எல் தொலை தொடர்பு நிறுவனமும் உருவானது.
டி.பி.ஜி. நம்பியார் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் பணியாற்றிய அனுபவத்தை கொண்டு 1961 ஆம் ஆண்டு பாலக்காடு மற்றும் பெங்களுருவில் பி.பி.எல் நிறுவனத்தை தொடங்கினார். 1990 ஆம் ஆண்டுகளில் டி.வி. ,வாஷிங் மெஷின், பிரிட்ஜ் போன்றவற்றையும் இந்த நிறுவனம் தயாரிக்க தொடங்கியது.
தரமான வடிவமைப்பு, தொழில்நுட்பம், பொருட்களின் உழைக்கும் தன்மையால் இந்திய வீடுகளில் மிக விரைவிலேயே பி.பி.எல் நிறுவன தயாரிப்புகள் இடம் பெற தொடங்கின.
டி.வி தயாரிப்புக்காக ஜப்பானின் சான்யோ நிறுவனத்துடன் பி.பி.எல் ஒப்பந்தம் செய்திருந்தது. 2002 ஆம் ஆண்டு மட்டும் பி.பி.எல் நிறுவனம் பல லட்சம் டி.வி. பெட்டிகளை விற்பனை செய்தது. அப்போது, இந்த நிறுவனத்தின் மதிப்பு 2,500 கோடி ஆகவும் உயர்ந்தது.
1991 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட தென்கொரியாவின் எல்.ஜி. , சாம்சங் போன்றவை இந்தியாவில் கால் பதித்தன. இந்த காலக்கட்டத்தில் பி.பி.எல் நிறுவனத்தின் விற்பனை சரிந்தது. மேலும், நிறுவனத்தின் பங்குதாரர்களுக்குள் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பி.பி.எல் நிறுவனம் படிப்படியாக நஷ்டத்தை நோக்கி போக தொடங்கியது.
எனினும், இப்போது வரை பி.பி.எல் நிறுவனம் இயங்கிக் கொண்டுதான் உள்ளது. கடந்த ஆண்டு 70 கோடிக்கு வர்த்தகம் செய்து 13 கோடி லாபம் ஈட்டியுள்ளது. மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ.560 கோடி ஆகும். வர்த்தகத்தில் வெற்றி, தோல்வியை மாற்றி மாற்றி சந்தித்த பி.பி.எல் நிறுவனத்தை தோற்றுவித்த டி.பி.ஜி. நம்பியார் நேற்று மரணமடைந்தார். அவருக்கு 94 வயதாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘ஹேப்பி எண்டிங்’ !
“திருமணத்திற்கு பின்பான தனியுரிமையும் அடிப்படை உரிமைதான்”: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு!