ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் குடும்பத்திற்கு மர்ம நபர் ஒருவர் இன்று(அக்டோபர் 5) தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்தியாவில் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் சமீபத்தில் இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தினார்.
மேலும், 2023ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவை செயல்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு இன்று (அக்டோபர் 5) பிற்பகல் 12.57 மணிக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார்.
மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசிய அந்நபர் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிடா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
அதுமட்டுமில்லாமல், ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக வெடிகுண்டு மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் மும்பை டிபி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் வருவது இது முதல் முறையல்ல, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு தொலைபேசி வாயிலாகக் கொலை மிரட்டல் வந்தது.
இந்த வழக்கை விசாரித்த மும்பை போலீஸ் கொலை மிரட்டல் விடுத்த 56வயதான விஷ்ணு பௌமிக் என்ற நபரை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் மனநலம் சரியில்லாதவர் என்று மும்பை போலீஸ் தெரிவித்திருந்தனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு அருகே ஒரு காரில் ஜெலடின் குச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் முகேஷ் அம்பானி குடும்பத்திற்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டிருப்பதால் அவரது குடும்பத்துக்கு மகாராஷ்டிரா அரசு பாதுகாப்பு அளித்து வருகிறது.
மோனிஷா
எஸ்.ஜே. சூர்யாவின் புதிய அவதாரம்!
இடுப்பு எலும்பு: ரசிகர்களை அதிர வைத்த குஷ்பு