தன்னிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும் கேரள நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரின்பேரில் பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பாலியல் ரீதியாக ஒருவரைத் தொடுதல், அணுகுதல், சமூக ஊடகத்தில் பாலியல் கருத்துகளைப் பகிர்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இந்தப் புகாரின் அடிப்படையில் மேலும் 30 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை பாபி தரப்பு மறுத்துள்ளது. அவர் ஜாமீனில் வெளிவந்த பிறகு விரிவான விளக்கம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற விசாரணையில் தான் எந்த விதத்திலும் தவறாக நடக்கவில்லை. அதனால், மன்னிப்பு கேட்க முடியாது என்று பாபி கூறியிருந்தார்.
இதற்கிடையே ஜனவரி 14-ஆம் தேதி அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மாலை 4.45 மணிக்கு உத்தரவிட்டும் அவர் சிறையில் இருந்து வெளியே வரவில்லை. வேண்டுமென்றே தனது விடுதலையை தாமதப்படுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து, கேரள உயர்நீதிமன்றம் கடுப்பானது.
மீடியாவின் கவனத்தை தன் மீது திருப்பும் வகையில் அவர் நடந்து கொண்டதாக நீதிமன்றம் பாபி மீது குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து, சிறையை விட்டு வெளியே வரவில்லை என்றால், ஜாமீனை மறுபரிசீலனை செய்ய வேண்டியது இருக்கும் என்று நீதிபதி குன்ஹி கிருஷ்ணன் காட்டமாக தெரிவித்திருந்தார். இதையடுத்து, நேற்று (ஜனவரி 15 ) பாபியின் வழக்கறிஞர்கள் 10 நிமிடத்தில் ஜாமீனுக்கு தேவையான ஆவணங்களை கொடுத்ததால், பாபி விடுவிக்கப்பட்டார்.
கேரள உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் பாபிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு, சில கருத்தையும் வெளியிட்டுள்ளது. ‘ சிறையில் தேவையில்லாத நாடகத்தை பாபி நடத்துவதாகவும் செவ்வாய்க்கிழமை இரவு உறங்காமல் மற்ற சிறை கைதிகளுடன் பேசிக் கொண்டு இருந்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. தனது நடத்தைக்காக பாபி மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, பாபியின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மன்னிப்பு தெரிவித்தனர். மேலும், ஜாமீன் உத்தரவு சிறைக்கு வர தாமதமான காரணத்தினால்தான் செவ்வாய்க்கிழமை தான் சிறையில் கழிக்க நேரிட்டதாகவும் நீதிமன்றத்துடன் தான் விளையாடவில்லை என்றும் பாபி தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறியதாவது, “ஹோட்டல் பில் கட்டாததற்காக கூட சிலர் சிறையில் அடைபட்டு கிடக்கின்றனர். சின்ன சின்ன தவறுகளுக்காக கூட பலர் சிறையில் வாடுகின்றனர். அவர்களை வெளியே ஜாமீனில் எடுக்கவே ஒரு நாள் கூடுதலாக சிறையில் கழித்தேன்.
10 முதல் 26 பேர் வரை அப்படி சிறையில் இருந்தனர். இவர்கள் பிணையில் செல்ல 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை தேவைப்படும். அந்த பணம் கூட அவர்களிடத்தில் இல்லை. அவர்களை பிணையில் எடுக்க நான் முயற்சிப்பேன். அவர்கள் என்னிடத்தில் முறையிட்டதால், நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். இது ஒன்றும் நீதிமன்றத்தை அவமதித்தது போல் ஆகாது” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்