அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளுக்கான கட்டணம் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார்.
அதன்படி ட்விட்டர் தன்வசம் வந்த சில மணி நேரங்களிலேயே ட்விட்டரின் முக்கிய பொறுப்புகளில் இருந்த பராக் அகர்வால், நெட் சேகல் உள்ளிட்டவர்களைப் பணி நீக்கம் செய்தார். மேலும் பல ஊழியர்களையும் அதிரடியாகப் பணி நீக்கம் செய்தார்.
பணி நீக்கம் செய்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் ட்விட்டரில் ”ப்ளூ டிக்” கொண்ட அதிகாரப்பூர்வ கணக்குகளைப் பயன்படுத்துபவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இதற்கான மாதாந்திர கட்டணத்தையும் எலான் மஸ்க் அறிவித்தார். மாதம் 20 அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1,600 வசூலிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் எலான் மஸ்க் மீண்டும் மாதாந்திர கட்டணத்தில் ஒரு சிறிய மாற்றத்தை செய்து, ப்ளூ டிக் பயனாளர்களிடமிருந்து மாதம் 8 டாலர், அதாவது இந்திய மதிப்பில் மாதம் ரூ. 660 வசூலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக ஒரு ட்விட்டர் பதிவையும் அவர் வெளியிட்டிருந்தார். அதில், “நீங்கள் என்னை தூக்கிவீசினாலும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளுக்கு 8 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும்” என்று கூறியிருந்தார்.
ப்ளு டிக் பயன்படுத்துவதற்குக் கட்டணம் செலுத்தும் பயனாளர்களுக்கு, தகவல் வழங்குதலில் முன்னுரிமை அளிக்கப்படும் மற்றும் விளம்பரங்கள் பாதியாக குறைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமின்றி ப்ளூ டிக் பயனாளர்கள் நீண்ட நேரமுள்ள வீடியோ மற்றும் ஆடியோக்களை பதிவிடும் வசதியும் அறிமுகப்படுத்தப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள ஆப்பிள் ஐபோன் பயனர்களிடம் இந்த கட்டண முறை நடைமுறைக்கு வந்துள்ளது
அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான கட்டண முறை இந்தியாவில் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் 23.6 மில்லியன் பேர் ட்விட்டரை பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
பட்டமளிப்பு விழா: கனிமொழி கைக்கு முத்தமிட்ட பெற்றோர்!
அட்லீயால் ஷாருக்கான் படத்துக்கு சிக்கல் : அதிர்ந்துபோன இந்தி சினிமா!