பாகிஸ்தானில் ரயிலை கடத்தி நூற்றுக்கணக்கான பயணிகளை பணயக்கைதிகளாக பிடித்துள்ளது கிளர்ச்சிப் படை. மேலும் பாகிஸ்தான் ராணுவ படைகள் நடவடிக்கை எடுத்தால் பணயக்கைதிகள் கொல்லப்படுவார்கள் என எச்சரித்துள்ளது. bla hijacked pakistan train and killed army men
பாகிஸ்தானின் தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவிலிருந்து கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவருக்கு ஒன்பது பெட்டிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் இன்று (மார்ச் 11) சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானிடமிருந்து பலூசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலூச் விடுதலை இராணுவம் (BLA) என்ற கிளர்ச்சிப்படையினர், ரயில் போலான் மாவட்டம் அருகே பெஹ்ரோ குன்ரி மற்றும் கடலார் இடையேயான சுரங்கப்பாதையில் வந்தபோது, ‘ரயிலை நிறுத்து… இல்லையென்றால் தண்டவாளங்களை வெடிக்கச் செய்வோம்’ என துப்பாக்கியுடன் ரயில்வே அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தனர்.
இதனையடுத்து நிறுத்தப்பட்ட ரயிலில் ஏறிய கிளர்ச்சிப் படையினர், ரயிலைக் கடத்தியதுடன், அதில் பயணித்த நூற்றுக்கணக்கான பயணிகளையும் பிணைக் கைதிகளாக பிடித்துள்ளனர்.
பணயக்கைதிகள் கொல்லப்படுவார்கள்! bla hijacked pakistan train and killed army men
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பி.எல்.ஏ செய்தித் தொடர்பாளர் ஜீயாண்ட் பலோச் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “எந்தவொரு ராணுவ ஊடுருவலுக்கும் சமமான பலமான பதிலடி கொடுக்கப்படும். இதுவரை ஆறு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் நூற்றுக்கணக்கான பயணிகள் பிணை கைதிகளாக உள்ளனர். பாகிஸ்தான் ராணுவ படைகள் நடவடிக்கை எடுத்தால் பணயக்கைதிகள் கொல்லப்படுவார்கள். இந்த நடவடிக்கைக்கு பலூச் விடுதலை இராணுவம் முழுப் பொறுப்பேற்கிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பலூசிஸ்தானின் போலான் மாவட்டத்தின் முஷ்காஃப் பகுதியில், சம்பவம் நடந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் அடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பலூசிஸ்தான் சுதந்திரம் கோரும் பி.எல்.ஏ bla hijacked pakistan train and killed army men
பலூசிஸ்தானில் பல ஆண்டுகளாக பிரிவினைவாத போராளிக் குழுக்களால் கிளர்ச்சி செய்யப்பட்டு வருகிறது. இது பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்திற்கு எதிராக அடிக்கடி போராடி வருகிறது. மேலும் பலூசிஸ்தானின் வளமான எரிவாயு மற்றும் கனிம வளங்களை நியாயமற்ற முறையில் பாகிஸ்தான் அரசு சுரண்டுவதாக குற்றஞ்சாட்டி வருகிறது.
அங்கு பல கிளர்ச்சிப் படைகள் உள்ள நிலையில், அவற்றில் மிகப்பெரியதாக பி.எல்.ஏ உள்ளது.

பலூசிஸ்தான் மாகாணம் பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணம். அது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 44 சதவீதத்தை உள்ளடக்கியது. ஆனால் அது மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாகாணமும் கூட. இந்த மாகாணம் உலகின் மிகப்பெரிய ஆழ்கடல் துறைமுகங்களில் ஒன்றான குவாதரைக் கொண்டுள்ளது. இது பிராந்திய மற்றும் உலகளாவிய வர்த்தக பாதைகளுக்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது என்று பாகிஸ்தான் கருதுகிறது.
பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பலூசிஸ்தான், வடகிழக்கில் கைபர் பக்துன்க்வா, கிழக்கில் பஞ்சாப் மற்றும் தென்கிழக்கில் சிந்து ஆகிய பாகிஸ்தான் மாகாணங்களுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. இது மேற்கில் ஈரானையும், வடக்கே ஆப்கானிஸ்தானையும், தெற்கு எல்லையாக அரபிக் கடலையும் கொண்டுள்ளது.