ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால், மே 13 ஆம் தேதி காலை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக சுவாதி மாலிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக டெல்லி போலீசில் புகாரும் அளித்துள்ளார்.
இந்த புகாரில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை ஏழெட்டு முறை கன்னத்தில் அறைந்ததாக சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார். மேலும், உன்னை கொன்று புதைத்துவிடுவேன் என மிரட்டி முகம், மார்பு, வயிறு மற்றும் உடலின் கீழ் பகுதிகளில் பிபவ் குமார் தாக்கியதாக சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர். கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்ற டெல்லி போலீசார், அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
இதற்கு பின்னணியில் பா.ஜ.க.வின் சதி உள்ளது என ஆம் ஆத்மி தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகிறது. கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரும், மாலிவாலுக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், பாஜக தலைமை அலுவலகம் நோக்கி இன்று ஆம் ஆத்மி கட்சியினர் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர். இதனை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். ஆனால், முற்றுகை போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால், பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. போராட்டம் நடத்துவது பற்றி கெஜ்ரிவால் கூறும்போது, “ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களான மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் மற்றும் சஞ்சய் சிங் ஆகியோரை சிறைக்கு அனுப்பும் விளையாட்டை பிரதமர் மோடி ஆடி கொண்டிருக்கிறார்.
அவர்கள் எங்களுடைய கட்சியின் பின்னாலேயே வருகின்றனர். எங்களுடைய தலைவர்களை ஒருவர் பின் ஒருவராக சிறைக்கு அனுப்பி கொண்டிருக்கின்றனர். என்னுடைய தனி உதவியாளரை (பிபவ் குமார்) சிறைக்கு அனுப்பி விட்டனர்.
ஆம் ஆத்மியின் எம்.பி. ராகவ் சத்தா மற்றும் டெல்லி மந்திரிகளான அதிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகியோரையும் சிறைக்கு அனுப்பி விடுவோம் என பாஜகவினர் கூறி வருகின்றனர்.
சில நாட்களில் ஆம் ஆத்மி கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என அமலாக்கத்துறையின் வழக்கறிஞர் ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இப்போது எங்கள் வங்கி கணக்கை முடக்கினால், எங்களுக்கு அனுதாபம் கிடைக்கும் என்பதால், தேர்தல் முடிந்தவுடன் ஆம் ஆத்மி கட்சியின் வங்கி கணக்குகளை முடக்குவார்கள். இதுதான் பாஜகவின் திட்டம்.
நாம் பெரிய கட்சியாக வளர்ந்து, அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியாக மாறக்கூடாது என்பதற்காக, ஆபரேஷன் ஜாதுவை பாஜக தொடங்கி உள்ளது. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியின் பெரிய தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தடையை மீறி ஆம் ஆத்மி கட்சியினர் பாஜக தலைமை அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கனமழை எச்சரிக்கை – பேரிடர் மேலாண்மை முக்கிய அப்டேட்!
‘பவர்ஃபுல்’ பங்கு! மார்க்கெட்டில் அசத்தும் ‘மகா ரத்னா’!