மோர்பி விபத்து : அமைச்சருக்கு வாய்ப்பு மறுத்த பாஜக!


குஜராத் மோர்பி தொகுதியில் தற்போதைய பாஜக எம்.எல்.ஏ.வுக்கு சீட் கொடுக்க அக்கட்சித் தலைமை மறுத்துவிட்டது.
குஜராத்தில் அடுத்த மாதம் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது.
தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி குஜராத் மாநிலம் மோர்பி பாலம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இதில் 135 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 55 பேர் குழந்தைகள் என்பதுதான் மிக மிக துயரமான செய்தி. இந்த விவகாரத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்களே தவிர இதுவரை வேறு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள காங்கிரஸ் தொடர்ந்து பாஜகவுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.


காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மோர்பி பால விபத்தில் இதுவரை யாரும் மன்னிப்பும் கேட்கவில்லை, யார் மீதும் ராஜினாமா உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.
மோர்பி பால விவகாரம் குஜராத் தேர்தலில் பாஜக வெற்றியைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்தச்சூழலில் இன்று குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக 160 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை இன்று வெளியிட்டுள்ளது. அதில் தற்போது எம்.எல்.ஏ-வாக உள்ள 38 பேருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.

அதன்படி மோர்பி எம்.எல்.ஏ.வாக இருக்கும் குஜராத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கந்திலால் சிவ்லால் அம்ருதியாவுக்கு மோர்பியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1995, 1998, 2002, 2007 மற்றும் 2012 என ஐந்து முறை மோர்பியில் எம்.எல்.ஏ.வாக இருந்த கந்திலால், கடந்த 2017 தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரிஜேஷ் மெர்ஜாவிடம் 3,419 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். பின்னர் 2020ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பிரிஜேஷ் மெர்ஜா பாஜகவில் இணைந்தார்.


தற்போது அவருக்குப் பதிலாக கந்திலால் மோர்பி தொகுதியில் போட்டியிட உள்ளார்.
மோர்பி பால விபத்தின் போது ஆற்றில் குதித்து மாயமானவர்களைக் கண்டுபிடிக்க உதவியவர் கந்திலால். அதுதொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலான நிலையில், தேர்தலில் வெற்றியை தக்க வைக்க அவருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறது பாஜக.

காந்திலால் மற்றும் பிரிஜேஷ் மெர்ஜா இருவருமே பட்டிதர் சமூகத்தைச் சார்ந்தவர்கள்.

மோர்பியில் 80,000 பட்டிதர்கள், 35,000 முஸ்லிம்கள், 30,000 தலித்துகள், 30,000 சத்வார சமூகத்தினர் (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்), 12,000 அஹிர்கள் (ஓபிசி) மற்றும் 20,000 தாகூர் சமூகத்தினர் என 2.90 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

அதன்படி அதிக மக்கள் தொகை கொண்ட பட்டிதர் சமூகத்தைச் சேர்ந்தவரையே பாஜக வேட்பாளாராக நிறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

மாணவர்களுடன் துபாய் பறந்த அன்பில் மகேஷ்

மாலத்தீவில் தீ விபத்து: 9 இந்தியர்கள் பலி!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts