பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி வரை பாஜகவின் இளைஞர் அணி தூய்மை இந்தியா இயக்கத்தை இந்தியா முழுவதும் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த முயற்சியின் ஒரு பகுதியாக மத்திய பிரதேசத்தில் உள்ள கத்காரி பெண்கள் பள்ளியில் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக அம்மாநில ரேவா தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனார்தன் மிஸ்ரா நேற்று (செப்டம்பர் 22 ) சென்றார்.
அப்போது அப்பள்ளியில் கழிவறை சுகாதாரமற்ற நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜனார்தன் மிஸ்ரா, களத்தில் இறங்கியதுடன், தன்னுடைய வெறும் கைகளாலேயே சுத்தம் செய்ய ஆரம்பித்தார். அவருடைய செயலை அங்குள்ளவர்கள் ஆர்வத்துடன் பார்த்ததுடன், அதை வீடியோவும் எடுத்தனர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ஜனார்தன் மிஸ்ரா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”பாஜக யுவ மோர்ச்சாவால் நடத்தப்படும் ’சேவா பக்வாடா’வின்கீழ், கத்காரி பெண்கள் பள்ளியின் கழிவறைகளை சுத்தம் செய்தேன். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தேன்’ என்று அதில் பதிவிட்டுள்ளார்.
மேலும், ”சுகாதாரம் மற்றும் தூய்மையைப் பராமரிப்பது ஒவ்வொருவரின் கடமை. இதுபோன்ற தூய்மை இயக்கத்தில், தாம் பங்கேற்பது இது முதல்முறையல்ல” என அதில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அக்டோபர் 2, 2014 அன்று ’ஸ்வச் பாரத்’ என்ற தூய்மை இயக்கத்தை நாடு முழுவதும் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆர்.எஸ்.எஸ். பேரணி: ஸ்டாலினுக்கு சீமான் கோரிக்கை!