தன் பெயருக்கு களங்கம் விளைவித்த ‘தி வயர்’ இணையதளத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அணியின் தேசியத் தலைவர் அமித் மாள்வியா புகார் அளித்ததைத் தொடர்ந்து, ‘தி வயர்’ மீது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
பாஜக அரசுக்கும் ‘தி வயர்’ இணைய இதழுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. அந்த இதழ், பாஜக செய்துவரும் ஊழல் குற்றச்சாட்டுகளை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதன் காரணமாகவே ’தி வயர்’ இணைய இதழ் பாஜக மூலம் பல வழக்குகளைச் சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், தன் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகச் சொல்லி பாஜகவின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அணியின் தேசியத் தலைவர் அமித் மாள்வியா அளித்த புகாரின் பேரில் ’தி வயர்’ மற்றும் அதன் நிர்வாகத்தின் மீது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த அக்டோபர் 6ஆம் தேதி இன்ஸ்டாவில் Cringearchivist என்ற பெயரில் இருந்த பதிவை, அமித் மாள்வியா நீக்கச் சொன்னதாகவும், இதையடுத்து, மெட்டா நிறுவனம் அந்தப் பதிவை நீக்கியதாகவும் ’தி வயர்’ நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
இதை அந்நிறுவனம் செய்தியாக வெளியிட்ட பின், அமித் மாள்வியாவிற்கும், ’தி வயர்’ இணையதளத்துக்கும் கடுமையான மோதல் முட்டத் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 10ஆம் தேதி, ’தி வயர்’ இணையதளம், “பாஜக அரசின் செயல்பாடுகள் மற்றும் அக்கட்சித் தலைவர்களை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் பதிவுகளை,
பாஜகவின் நிர்வாகி அமித் மாள்வியா, உடனே மெட்டா நிறுவனத்துக்கு புகாரளித்தால், அந்த பதிவுகள் எந்த கேள்விகளுக்கும் உட்படுத்தப்படாமல் அந்த நிறுவனத்தால் நீக்கப்பட்டுவிடுகிறது” என செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும், இந்த அதிகாரத்தை ஒருசில பிரபலங்களுக்கு மட்டுமே மெட்டா நிறுவனம் வழங்கியிருப்பதாகவும், அதில் பாஜக நிர்வாகி அமித் மாள்வியாவிற்கும் இந்த அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக ’தி வயர்’ இணையதளம் தெரிவித்திருந்தது.
இதையடுத்தே, இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ’தி வயர்’ நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், “இந்த செய்தித் தொகுப்பு மெட்டாவில் இருக்கும் எங்களுக்கு தெரிந்த வட்டாரத்திடம் இருந்து தகவல் கிடைத்தது” என தெரிவித்திருந்தார்.
ஆனால் மெட்டா நிறுவன தகவல் தொடர்பு தலைவரான ஆன்டி ஸ்டோன், ” ‘தி வயர்’ செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பது முற்றிலும் புனையப்பட்டது” எனப் பதிலளித்திருந்தார்.
இதையடுத்து ’தி வயர்’ இணையதளம், அந்த செய்தியை வெளியிட்டதற்காக, மெட்டாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இதன்காரணமாக, ’மெட்டா நிறுவனம் தனக்கு சிறப்பு அதிகாரம் கொடுத்திருக்கிறது’ என ’தி வயர்’ நிர்வாகம் வெளியிட்டிருக்கும் செய்தி உண்மைக்கு புறம்பானது.
ஆகவே அந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமித் மாள்வியா, டெல்லி சிறப்பு குற்றப்பிரிவு காவல் ஆணையரிடத்தில் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரில், “ ‘தி வயர்’ நிறுவனம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் போலி ஆவணங்களை தயாரித்து செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஆகையால் அந்நிறுவன ஆசிரியர்கள் மீது ஏமாற்றுதல், மோசடி செய்தல், நற்பெயருக்கு தீங்கு விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை அந்த நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஜெ.பிரகாஷ்
கோவை கார் வெடிப்பு: அண்ணாமலையிடம் இருக்கும் ரகசிய ஆவணம் என்ன?
டீசல் இல்லாமல் நின்ற ஆம்புலன்ஸ்: சாலையோரத்தில் நடந்த பிரசவம்!