’செங்கோலை வைத்து திசைதிருப்பும் பாஜக’: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு!

அரசியல் இந்தியா

வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் போன்ற பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பாஜக அரசு செங்கோலைப் பயன்படுத்துகிறது என்று அமெரிக்காவில் ராகுல்காந்தி பேசியுள்ளார்.

காங்கிரஸ் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணிக்கு  சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்தார்.

அதனையடுத்து இன்று ( மே 31) சான்பிரான்சிஸ்கோவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

மக்களை திசைதிருப்ப செங்கோல்!

அப்போது அவர் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்து கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசுகையில், “இந்தியாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மக்களை அச்சுறுத்துகிறது. இந்தியாவில் அனைத்து அரசியல் வழிகளையும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்துகிறது. அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்துகிறது.

பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் அரசியல் சாசனத்தை தாக்கி வருகின்றன. சாதி மற்றும் மத அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் போன்ற பிரச்சனைகளில் இருந்து மக்களை திசைதிருப்ப தற்போது பாஜக அரசு செங்கோலை கையிலெடுத்துள்ளது.

பாரத் ஜோடோ யாத்திரை

எனது ‘பாரத் ஜோடோ யாத்திரை’ தொடங்கும் முன், அரசியலில் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கமான நடைமுறைகள் இனி வேலை செய்யாது என்பதை உணர்ந்தேன்.

மக்களுடன் இணைவதற்குத் தேவையான அனைத்து வழிகளையும் பாஜக – ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்தியது. அதனால் தான் இந்தியாவின் தென்கோடியில் இருந்து ஸ்ரீநகருக்கு ‘பாரத் ஜோடோ யாத்ரா’ தொடங்கப்பட்டது.

பாசம், மரியாதை மற்றும் பணிவு உணர்வுடன் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. வரலாற்றைப் படித்தால், குருநானக் தேவ், குரு பசவண்ணா, நாராயணகுரு உள்ளிட்ட அனைத்து ஆன்மிகத் தலைவர்களும் இதே வழியில்தான் நாட்டை ஒருங்கிணைத்துள்ளனர் என்பது புலப்படும்.

பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்துவதற்கு அரசு தனது முழு பலத்தையும் பயன்படுத்தியது. ஆனால் எதுவும் யாத்திரை விவகாரத்தில் பலனளிக்கவில்லை, மாறாக யாத்திரையின் தாக்கம் தான் அதிகரித்தது. ‘இந்தியராய் ஒன்று சேருங்கள்’ என்ற எண்ணம் அனைவரின் இதயத்திலும் இருப்பதால் இது நடந்தது” என்று குறிப்பிட்டார் ராகுல் காந்தி.

ஊடகங்களில் உண்மையா?

மேலும் இந்திய ஊடகங்கள் குறித்தும் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார் ராகுல்.

“ஊடகங்கள் காட்டுவது இந்தியா அல்ல. ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட கதையை மட்டுமே காட்ட விரும்புகின்றன. இந்தியாவின் யதார்த்தத்துடன் எந்த தொடர்பும் இல்லாத அரசியல் கதையை விளம்பரப்படுத்த ஊடகங்கள் முயற்சிக்கின்றன.

அத்தகைய விஷயங்களை மீடியாக்கள் காட்டுவது பாஜகவுக்கு உதவுகிறது என்பது பயணத்தில் எனக்கு மிகவும் தெளிவாகத் தெரிந்தது. எனவே ஊடகங்களில் எதைப் பார்த்தாலும் உண்மை என்று நினைக்க வேண்டாம்” என்று கூறினார் ராகுல்.

கடவுள் கூட குழம்பிவிடுவார்

தொடர்ந்து பிரதமர் மோடி குறித்து ராகுல் கிண்டல் செய்து பேசினார். “ உலகம் மிகவும் பெரியது, எல்லோரையும் பற்றி தனக்கு எல்லாம் தெரியும் என்று யாரும் நினைக்க முடியாது. எல்லாம் தெரியும் என்று நினைக்கும் சிலர் இந்தியாவில் இருப்பது ஒரு நோய் போன்றது.

கடவுளை விட தனக்கு அதிகம் தெரியும் என்று அவர் (பிரதமர் மோடி) நினைக்கிறார். பிரதமர் மோடியை கடவுள் முன் அமரச் சொன்னால், பிரபஞ்சத்தில் என்ன நடக்கிறது என்பதை கடவுளுக்கு விளக்கிச் சொல்லத் தொடங்குவார் என்று நான் நினைக்கிறேன். அதனால் கடவுள் கூட தான் எதைப் படைத்தோம் என்று குழம்பி விடுவார்.

இதுதான் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் எல்லாம் தெரிந்த சிலர் இருக்கிறார்கள். விஞ்ஞானிகளிடம் சென்றால் அறிவியலைப் பற்றிச் சொல்கிறார்கள், வரலாற்றாசிரியர்களிடம் சென்றால் வரலாற்றைப் பற்றிச் சொல்கிறார்கள். அவர்கள் போர் பற்றி இராணுவத்திடமும், விமானப்படைக்கு பறப்பது பற்றியும் சொல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எதுவும் புரியவில்லை என்பதே உண்மை” என்று சிரித்தார் ராகுல்.

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 22 அன்று அமெரிக்கா செல்ல உள்ளார். அதற்கு முன்னதாக இப்போது அமெரிக்கா சென்றுள்ள ராகுல்காந்தி, இந்திய வம்சாவளியினர், வால் ஸ்ட்ரீட் நிர்வாகிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாட உள்ளார். தனது பயணத்தை நியூயார்க்கில் ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்துடன் முடிக்க உள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *