நாட்டில் கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை ரூ.7.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் 90 சதவீத கல்விக் கடன்கள் பொதுத்துறை வங்கிகளால் வழங்கப்படுகின்றன.
அதன்படி தற்போது ரூ.7.5 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு பிணை அல்லது மூன்றாம் தரப்பு உத்தரவாதத்தை வங்கிகள் நாடுவதில்லை.
இந்நிலையில் கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை ரூ.7.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
எனினும் இதனை செயல்படுத்த தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், மத்திய அரசின் கல்வி அமைச்சகத்துடன் நிதி அமைச்சகத்தில் உள்ள நிதிச் சேவைகள் துறை ஆலோசனை நடத்தியது.
“நிதிச் சேவைகள் துறையானது, கல்விக் கடனுக்கான பிணையமில்லா வரம்பை அதிகரிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
மேலும் கல்விக் கடனுக்கான கட்டணத்தை உயர்த்துவதற்கு கல்வி அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
8% செயல்படாத சொத்துகள்!
கடந்த ஜூன் 30ம் தேதி வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கல்விக் கடன்களில் சுமார் 8 சதவீதம் திருப்பி செலுத்தப்படாமல் செயல்படாத சொத்துக்களாக மாறி உள்ளன.
இதனால் குறைந்த மதிப்புள்ள கல்விக் கடன்களை வழங்குவதில் பொதுத்துறை வங்கிகள் எச்சரிக்கையாக இருந்து வருகின்றன.
அத்துடன் கல்விக்கடன்களை திருப்பிச் செலுத்தாமல் இருப்பதை சுட்டிக்காட்டி, கல்விக்கடன்களை வழங்க மறுப்பும் தெரிவித்து வருகின்றன.

உத்தரவாத வரம்பு அதிகரிப்பு?
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அரசுக்குச் சொந்தமான 12 பொதுத்துறை வங்கிகளின் கூட்டத்தை மத்திய நிதிச் சேவைத் துறை கூட்டியது.
அப்போது கல்விக் கடன்களுக்கான உத்தரவாதத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான தன்மையை உறுதி செய்யுமாறு நிதிச் சேவைத்துறையிடம் வலியுறுத்தப்பட்டது.
தற்போது டெல்லி மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில், கல்விக்கடனுக்கான உத்தரவாத வரம்பு ரூ. 10 லட்சம் ஆக உள்ளது.
இந்நிலையில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியான பிணையில்லா உத்தரவாத கடனை வழங்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
நடப்பு நிதியாண்டிற்கான கல்விக் கடனாக 20,000 கோடி ரூபாய்க்கு மேல் வழங்க பொதுத்துறை வங்கிகளுக்கு அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
இதில் முதல் காலாண்டில் மட்டும் மொத்த இலக்கில் 19 சதவீதத்தை வங்கிகள் அடைந்துள்ளன. மேலும் திட்டமிட்டுள்ள இலக்கை அடைய வங்கிகள் அதிக அளவில் கடன் வழங்க மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா