மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்த கடந்த 7 ஆண்டுகளில் பல அதிரடி சட்டங்களை அமல்படுத்தியுள்ளது.
தற்போது பிறப்புச் சான்றிதழ் இருந்தால் தான் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல தேவைகளை இந்தியர்கள் பெற முடியும் என்கிற நிலையை உருவாக்கும் விதமாக சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதுவும் டிசம்பர் 7ஆம் தேதி கூடவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே இந்த சட்டத் திருத்தத்தை கொண்டுவர மத்திய உள்துறை அமைச்சகம் முனைப்பு காட்டி வருகிறது.
இதற்காக 1969ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. கடந்த ஆண்டே இந்த திருத்தச் சட்டத்திற்கான வரைவு மசோதா மக்கள் கருத்திற்காக முன்வைக்கப்பட்டிருந்தது. இதில் மாநில அரசுகள் பரிந்துரைத்திருந்த மாற்றங்கள் கருத்தில் கொள்ளப்பட்டு சில திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
இந்த திருத்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமே தற்போது மாநில அளவில் பராமரிக்கப்பட்டு வரும் பிறப்பு, இறப்பு பதிவு குறித்த தரவுகளை தேசிய அளவில் ஆர்ஜிஐ (RGISTRAR GENERAL OF INDIA) வரை எடுத்துச் செல்வது தான்.
ஏற்கனவே ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஆர்ஜிஐ-ன் கீழ் உள்ள சிஆர்எஸ்-ஆன்லைன் தளம் வழியாகத்தான் பிறப்பு இறப்பை பதிவு செய்து வருகின்றன. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் தங்களுக்கான சொந்த பதிவு முறையை கொண்டுள்ளன.
தமிழ்நாட்டில் 2000-மாவது ஆண்டு வரை தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவுசட்டம் 1977, நடைமுறையில் இருந்தது. 2000-மாவது ஆண்டு இந்த சட்டம் நீக்கப்பட்டு புதிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் அமலுக்கு வந்தது. இதன்படி புதுப்பிக்கப்பட்ட பதிவுமுறை ஜனவரி 1, 2000-மாவது ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.
இப்போது மத்திய அரசு கொண்டுவரும் இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால் தேசிய அளவில் பிறப்பு இறப்பு குறித்த தரவுகளை கையாள ஆர்ஜிஐக்கு அதிகாரம் கிடைக்கும்.
தற்போது வரை பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மாநில அரசுகளால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு பிறக்கும் குழந்தைகளின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்தை உறுதி செய்ய பிறப்புச் சான்றிதழ் பயன்படுத்தப்படும்.
அதன்படி, பள்ளிக் கல்லூரிகளில் சேர்வதற்கும், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும், வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கும், திருமண பதிவு மற்றும் மத்திய, மாநில அரசுப் பணிகளில் வேலையில் சேர்வதற்கு, பாஸ்போர்ட் பெறுவதற்கு என பல தேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாய தேவையாக மாற உள்ளது.
மருத்துவமனைகளில் மரணம் நிகழும்போது பதிவாளர் மற்றும் உறவினருக்கு மரணத்திற்கான காரணம் குறித்த சான்றிதழை மருத்துவமனை நிர்வாகம் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.
இதன் மூலம் ஒரு நபர் 18 வயதை அடைந்த பிறகு அரசின் வசம் உள்ள தரவு வங்கி மூலம் தானாகவே அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படும். இதே போல இறந்துவிட்டவர்களின் பெயர் தானாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். இது எல்லாம் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளப்படும்.
இதன் மூலமாக தேசிய மக்கள்தொகை பதிவேடு, வாக்காளர் பதிவேடு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் எளிதாக திருத்தங்களை மேற்கொண்டு அப்டேட் செய்துகொள்ளலாம்.
என்.ஆர்.சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டுவருவதற்கு முதல்படியாக இந்த திருத்தச் சட்டம் பயன்படும்.
அப்துல் ராஃபிக்
“என் ஹீரோ மெஸ்ஸி தான்” கேரளா டூ கத்தார் சென்ற பெண்!
மது வாங்க ஆதார்… திமுகவுக்கு செலக்ட்டிவ் அம்னீசியாவா?: கமல் கட்சி கேள்வி!