பில்கிஸ் பானு கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில், 11 குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 30) மனுத்தாக்கல் செய்துள்ளார்.
2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு குஜராத்தில் வெடித்த கலவரத்தின் போது 5 மாதம் கர்ப்பிணியான பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவத்தில், பில்கிஸ் பானுவின் மூன்று வயது குழந்தை உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

2008-ஆம் ஆண்டு பில்கிஸ் பானு வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரும், 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருவதால் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
குற்றவாளிகள் விடுதலை குறித்து குஜராத் அரசு ஒரு குழு அமைத்து ஆராயலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
குஜராத் அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு 11 பேரையும் விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி 11 பேரும் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

11 பேரின் விடுதலையை குஜராத் அரசு தீர்மானிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை மறுஆய்வு செய்யக்கோரி பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தி, பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பாக பட்டியலிட்டார்.
வழக்கின் தன்மை குறித்து ஆராய்ந்து பில்கிஸ் பானுவின் மனுவை விசாரிப்பதாக நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
செல்வம்
“சாலைகளுக்காக நிலங்களை கையகப்படுத்திதான் ஆகவேண்டும்” –அமைச்சர் எ.வ.வேலு
“நான் தயார்… நீங்கள் தயாரா?”: மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி சவால்!