பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 குற்றவாளிகளை குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்ததை ரத்து செய்து உச்சநீதிமன்றம் இன்று (ஜனவரி 8) தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு குஜராத்தில் வெடித்த கலவரத்தின் போது 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இந்த பயங்கர சம்பவத்தில், பில்கிஸ் பானுவின் மூன்று வயது குழந்தை உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து, 2008-ஆம் ஆண்டு பில்கிஸ் பானு வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரும், 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருவதால் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். குற்றவாளிகள் விடுதலை குறித்து குஜராத் அரசு ஒரு குழு அமைத்து ஆராயலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
குஜராத் அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழுவானது, 11 பேரையும் விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி 11 பேரும் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.
11 பேரின் விடுதலையை குஜராத் அரசு தீர்மானிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை மறுஆய்வு செய்யக்கோரி பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, உஜ்ஜல் புயன் இன்று தீர்ப்பளித்தனர்.
அதன்படி, “பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மன்னிக்க முடியாது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமை முக்கியமானது.
குற்றவாளிகளை விடுதலை செய்யும் உத்தரவுகளை நிறைவேற்ற குஜராத் அரசுக்கு தகுதி இல்லை. இந்த வழக்கு மகாராஷ்டிராவில் நடைபெற்றதால், அம்மாநில அரசு தான் விடுதலை குறித்து ஆராய முடியும்.
எனவே பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ததை ரத்து செய்கிறோம்.
அனைத்து குற்றவாளிகளும் இரண்டு வாரங்களுக்குள் சிறை நிர்வாகத்தின் முன்பு ஆஜராக வேண்டும்” என்று தீர்ப்பளித்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கனமழை எச்சரிக்கை: சென்னை புத்தக கண்காட்சி விடுமுறை!
சிவகாசி காலண்டர்கள் விற்பனை ரூ.350 கோடி: மக்களவைத் தேர்தலால் 10% உயர்வு!
Comments are closed.