பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கு: நீதிபதி விலகல்!

இந்தியா

குஜராத் வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி பெலா எம்.திரிவேதி விலகியுள்ளார்.

கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கரசேவர்கள் வந்த இரு பெட்டிகளில் மர்மநபர்கள் தீவைத்தனர். இதில் ரயில் பெட்டிகளில் பயணம் செய்த 59 கரசேவகர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையின்போது, பில்கிஸ் பானு என்பவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். மேலும் அவரது குடும்பத்தினர் அவரது கண்முன்பாகவே படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடா்பாக 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவா்கள் அனைவரையும் கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு விடுவித்தது. கடந்த 1992ஆம் ஆண்டு குஜராத்தில் அமல்படுத்தப்பட்ட சிறைக் கைதிகள் தண்டனைக் குறைப்பு கொள்கை அடிப்படையில், அவா்கள் விடுவிக்கப்பட்டதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தண்டனைக் காலம் முடியும் முன்பாக குற்றவாளிகள் 11 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்தது தொடா்பான குஜராத் மாநில அரசின் முடிவுக்கு எதிராக பில்கிஸ் பானு, கடந்த நவம்பர் 30ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ’மகாராஷ்டிர அரசின் தண்டனைக் குறைப்பு கொள்கை இவ்வழக்கில் பொருந்தும் என்றும், அதை பின்பற்றியிருந்தால் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை’ என்றும் பில்கிஸ் பானு தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் பெலா எம்.திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வுமுன்பு இன்று (டிசம்பர் 13) விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கிலிருந்து நீதிபதி பெலா எம்.திரிவேதி விலகியுள்ளார். பில்கிஸ் பானு வழக்கை இன்று விசாரித்த நீதிபதி அஜய் ரஸ்தோகி, திரிவேதி இந்த வழக்கில் ஆஜராக விரும்பவில்லை எனக் குறிப்பிட்டார். மேலும், அவர் விலகுவதற்கான காரணத்தையும் நீதிமன்ற அமர்வு குறிப்பிடவில்லை.

இதையடுத்து, வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்குகள் இதே அமர்வில் விசாரணைக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

விவாகரத்து: சோகத்தில் ஹன்சிகா குடும்பம்!

கேலோ இந்தியா விளையாட்டு நிதி: தமிழகத்துக்கு குறைவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *