பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரை இன்று (செப்டம்பர் 7) டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கும் மத்தியில் ஆளும் பிஜேபிக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.
இதன் விளைவாக கடந்த ஆகஸ்ட் 9ம்தேதியுடன் பாஜகவுடன் கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதிஷ்குமார், தன் முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
பின்னர், ராஷ்டிரிய ஜனதா தள தேஜஸ்வி யாதவ்வை சந்தித்து ஆலோசனை நடத்தியதுடன், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிர ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மீண்டும் பீகாரின் முதல்வராக 8ஆவது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார். துணை முதல்வராக ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார்.
பீகாரில் ஒரேநாளில் நடைபெற்ற இந்த அரசியல் மாற்றம், மத்தியில் ஆளும் பாஜகவுக்கே அதிர்ச்சியாக இருந்தது. அதேநேரத்தில், அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய நிதிஷுக்கும் தேஜஸ்விக்கும், மற்ற மாநில கட்சிகள் வாழ்த்துகள் தெரிவித்தன.
இந்த நிலையில், 2024 நாடாளுமன்றத் தோ்தலில் பிஜேபிக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் நிதிஷ்குமாா் களமிறங்கியுள்ளார்.
அதன் முதற்கட்டமாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட நிதிஷ், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மதச்சாா்பற்ற ஜனதா தளம் தலைவா் ஹெச்.டி.குமாரசாமி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரை இன்று டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார், நிதிஷ்.
இதுகுறித்து பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், “சரத்பவாரை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது.
பிஜேபி ஒருவேலையும் செய்வதில்லை. அக்கட்சிக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது முக்கியம். எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால் அது நாட்டுக்கு நலன் தரும்” என்றார்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார், அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேசி வருவது இந்திய அரசியலில் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.
ஜெ.பிரகாஷ்