பாரத் ஜோடோ யாத்ராவில் சோனியா பங்கேற்காதது ஏன்?

இந்தியா

கன்னியாகுமரியிலிருந்து தொடங்கவிருக்கும் காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்ராவிற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் மருத்துவ சிகிச்சை காரணமாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (செப்டம்பர் 7) கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.

மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவிற்கு மேற்கொள்ளப்படும் இந்த நடைப்பயணத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி காந்தி மண்டபத்திற்கு அருகில் தொடக்க விழா நடைபெற்று வருகிறது.

இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியைக் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொடக்க விழா நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொள்ள இயலவில்லை என்பதால் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தியின் வாழ்த்து செய்தியை எம்.பி. ஜோதிமணி மேடையிலிருந்து அனைவருக்கும் படித்துக் காண்பித்தார்.

“நான் தற்போது மேற்கொண்டு வரும் மருத்துவ பரிசோதனை காரணமாக இன்று மாலை கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை தொடரவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பாரத் ஜோடோ யாத்திரை இந்திய ஒற்றுமை பயணத் தொடக்கவிழாவில் உங்கள் அனைவருடனும் நேரில் கலந்து கொள்ள இயலாமல் போனதற்கு வருந்துகிறேன்.

இந்த யாத்திரை மிகவும் புகழ்பெற்ற பாரம்பரியத்தைக் கொண்ட நமது இந்தியத் தேசிய காங்கிரஸ் மக்கள் இயக்கத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.

நமது இயக்கம் இந்த நடைப்பயணத்திற்குப் பிறகு மிகுந்த புத்துணர்ச்சி பெரும் என்று நான் நம்புகிறேன். இந்திய அரசியலில் இது ஒரு முக்கியமான மாற்றத்தை நிகழ்த்துவதற்கான தருணம்.

சுமார் 3,500 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிகழவுள்ள இந்த பாதயாத்திரையில் முழுவதுமாக கலந்து கொண்டு நிறைவு செய்யப்போகும் நமது கட்சியின் சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதைத்தவிரவும் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இந்த யாத்திரையில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

யாத்திரை நிகழ்வுகளை தவறாமல் நேரலையில் பார்த்துக் கொண்டு பாரத் ஜோடா யாத்ராவில் உற்சாகத்துடனும் உணர்வுப்பூர்வமாகவும் பங்கேற்பேன்.

ஆகவே நாம் அனைவரும் நமது தீர்மானத்தில் ஒற்றுமையாகவும், உறுதியாகவும், ஒன்றிணைந்து முன்னேறிச் செல்வோம்” என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.

மோனிஷா

தொழிலதிபர்களின் தயவில்லாமல் மோடி ஆட்சி நீடிக்காது: ராகுல்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *