Bhajan Lal Sharma as Rajasthan Chief Minister
ராஜஸ்தான் மாநில முதல்வராக பாஜகவின் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு முதல் முறையாக வெற்றிபெற்ற பஜன் லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது பாஜக.
இதனையடுத்து மூன்று மாநிலங்களிலும் முதல்வரை தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரை தொடர்ந்து ராஜஸ்தானின் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் ஜெய்ப்பூரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 12) மாலை 4 மணியளவில் கூடியது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், கட்சியின் இணை பார்வையாளர்களான வினோத் தாவ்டே மற்றும் சரோஜ் பாண்டே ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற 115 பாஜக எம்.எல்.ஏக்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், பாஜக மாநில பொதுச் செயலாளரான பஜன்லால் சர்மா ராஜஸ்தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
#WATCH | BJP names Bhajanlal Sharma as the new Chief Minister of Rajasthan pic.twitter.com/j3awHnmH7k
— ANI (@ANI) December 12, 2023
சங்கனேர் சட்டமன்ற தொகுதியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளரை 48,081 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் முறையாக எம்எல்ஏ ஆனார் பஜன் லால் சர்மா.
அவரை ராஜஸ்தானின் புதிய முதல்வராக வசுந்தரா ராஜே அறிவித்தார். முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான வசுந்தரா பெயரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் எம்.எல்.ஏக்கள் தியா குமாரி மற்றும் பிரேம்சந்த் பைர்வா ஆகியோர் ராஜஸ்தானின் துணை முதல்வர்களாகவும், எம்.எல்.ஏ வாசுதேவ் தேவனானி சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பஜன் லால் ஷர்மா யார்?
ராஜஸ்தானில் பஜன் லால் சர்மாவின் அரசியல் பயணம் குறிப்பிடத்தக்க சாதனைகளால் கவனிக்கப்படுகிறது. பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக நான்கு முறை பதவி வகித்துள்ளார்.
அவர் சங்கனேர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் (INC) போட்டியாளரான புஷ்பேந்திர பரத்வாஜுக்கு எதிராக 145,162 வாக்குகளைப் பெற்று, பலரையும் கவனிக்க வைத்தார்.
முதல் முறையாக எம்.எல்.ஏ.வான இவர், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) ஆகியவற்றுடன் தொடர்புடையவர்.
மத்தியபிரதேச மற்றும் சத்தீஸ்கர் முதல்வர்கள் யார்?
முன்னதாக மத்தியபிரதேசத்தில் 3 முறை முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகானுக்கு மீண்டும் முதல்வராகும் வாய்ப்பினை மறுத்த பாஜக தலைமை, உஜ்ஜைனியின் தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. மோகன் யாதவை முதல்வராக அறிவித்தது.
அதேபோன்று சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக பழங்குடியின தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
போலி பாஸ்போர்ட்.. டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான புகாரில் ஆதாரம் இல்லை: தமிழக அரசு
கொடநாடு விவகாரம் : எடப்பாடி வழக்கில் முக்கிய உத்தரவு!
Bhajan Lal Sharma as Rajasthan Chief Minister