பிஎப்7 கொரோனா: பிரதமர் மோடி எடுத்த முக்கிய முடிவுகள்!

இந்தியா


இந்தியாவிலும் உருமாறிய பிஎப்7 கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், முன்கூட்டியே பரவலைத் தடுக்க இன்று (டிசம்பர் 23) சில முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

ஓமிக்ரான் மாறுபாட்டின் மிகவும் பரவக்கூடிய பிஎப்-7 தற்போது உலக நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. விரைவில் கொரோனா தொற்று பிடியிலிருந்து மீண்டுவிடலாம் என்று எண்ணியிருந்த மக்களிடையே பிஎப்-7 அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் 4 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் இந்தியாவில் பிஎப்-7-ஆல் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றாலும், சீனாவில் இருப்பது போல் இந்தியாவில் நிலைமை மோசமாக இருக்காது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

”பெரும்பாலான இந்தியர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் மூலமும், ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இயற்கையாகவும் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டுள்ளனர்.

சீனாவைப் பொறுத்தவரைப் பூஜ்ஜியக் கொள்கை காரணமாக இந்தியாவைப் போன்ற தொற்றுநோய்களின் அலைகளை எதிர்கொள்ளவில்லை. இந்தியாவில் மூன்று அலை ஏற்பட்டு இயற்கையாகவே மில்லியன் கணக்கான மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்தது.

சீன மக்கள் இதுபோன்று நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெறவில்லை. அதுபோன்று அங்கு வயதானவர்களுக்குத் தடுப்பூசி போட நேரம் ஒதுக்கப்படவில்லை. இதனால் சீனாவில் வயதானவர்களிடையே தொற்றின் வேகம் அதிகமாக உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை முதல் டோஸுக்கு தகுதியான மக்கள் தொகையில் 95 சதவிகித பேரும், இரண்டாவது டோஸ் 85 சதவிகிதத்துக்கு அதிகமானவர்களும் தடுப்பூசிப் போட்டுக்கொண்டுள்ளனர்” என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதுபோன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும், மரபணு சோதனையை அதிகரிக்கவும் உத்தரவிட்டார்.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

அதுபோன்று நோய் பரவலை கட்டுப்படுத்தும் ஆலோசனையில் மூன்றாவது நாளாக ஈடுபட்டுள்ளார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா. இன்றைய ஆலோசனையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டுள்ளார்.

இதுபோன்று கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

மூக்கின் வழியே மருந்து போட ஒப்புதல்!

பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியே செலுத்தப்படும் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. பூஸ்டராக பயன்படுத்தப்பட உள்ள புதிய தடுப்பு மருந்தை இன்று முதல் கொரோனா தடுப்பு திட்டத்தில் சேர்க்க அனுமதி வழங்கியுள்ளது.

மருத்துவமனைகளில் ஒத்திகை

வரும் டிசம்பர் 27ஆம் தேதி இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அவசர ஒத்திகைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
நெருக்கடி நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும்? மருத்துவச் சிகிச்சையை எப்படி விரைந்து வழங்குவது என ஒத்திகை பார்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதற்காக அனைத்து மருத்துவமனைகளும் தயாராகி வருகின்றன. அன்றைய தினம் அமைச்சர் மன்சுக் மாண்டவியா அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

பண்டிகை கால கூட்டங்களை தவிர்க்க நடவடிக்கை!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வர இருப்பதால் பொது இடங்களில் கூட்டங்கள் கூடுவது தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது.

பொது இடங்களில் மாஸ்க் அணிவதை கடைபிடிக்க வேண்டும். அதிகளவு கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ப்ளூ காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட அளவில் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

திடீரென கொரோனா அதிகரித்தால் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

பிரியா

கால்பந்து நாயகன் மெஸ்சி: கெளரப்படுத்திய ரசிகர்கள்!

அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *