கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முதல்முறையாக தமிழ் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.
கர்நாடகாவில் முதன்முறையாக வரும் டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதிவரை தமிழ் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இவ்விழா பெங்களூருவில் உள்ள அல்சூர் பகுதியில் நடைபெற இருக்கிறது. இவ்விழாவை, கர்நாடகத் தமிழ்ப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் மற்றும் கர்நாடகத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம் இணைந்து நடத்துகிறது.
டிசம்பர் 25ஆம் தேதி மாலை 3 மணிக்கு இவ்விழாவை, முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மற்றும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடங்கிவைக்கிறார். இப்புத்தக திருவிழாவில், சங்ககாலம் முதல் நவீன காலம் வரையிலான இலக்கியப் படைப்புகள் அனைத்தும் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அனைத்து நூல்களுக்கும் 10 சதவிகிதம் தள்ளுபடி அளிக்கப்பட இருக்கிறது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகக் காட்சி அரங்குகள் திறந்து இருக்கும். தவிர, அனைவருக்கும் இலவச அனுமதி உண்டு’ எனப் புத்தக திருவிழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கர்நாடக மாணவர்களிடையே தமிழை கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கவும், புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தவும் திருவிழாவில் பங்கேற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தலா ரூ.100 மதிப்புள்ள புத்தக அன்பளிப்பு சீட்டும் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
இத்திருவிழாவின் ஒரு பகுதியாக 8 நாட்களும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு மொழித்திறன் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. இதில் வெற்றிபெறும் மாணவர்களுக்குப் பரிசுத் தொகையும், போட்டிகளில் சிறப்பிடம் பிடிக்கும் பள்ளிகளுக்கு கேடயமும் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது.
ஜெ.பிரகாஷ்
8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!
முதல் இஸ்லாமிய பெண் போர் விமானி: இந்தியாவின் இன்னொரு சானியா மிர்சா